ஆட்கொல்லி சிறுத்தையை சென்னைக்கு கொண்டு வந்த வனத்துறையினர்! வண்டலூரில் வைத்து பராமரிக்க முடிவு
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில், இந்த சிறுத்தை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. பொதுவாக மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு அடர்ந்த காட்டில்தான் விடப்படும். ஆனால், இந்த சிறுத்தை வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சமீபத்திய நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால் வனத்துறையினர் இதனை பிடிக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்த 3 பெண்களை திடீரென சிறுத்தை தாக்கியது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தை தாக்கி காயமடைந்த 3 பேரில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் பந்தலூர் மேங்கோரேஞ்ச் பகுதியில், தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த 3 வயது வடமாநில சிறுமியை சிறுத்தை அடித்து இழுத்துச் சென்றது. நீண்ட முயற்சிக்கு பின்னர், சிறுமி கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மக்கள் கடையடைப்பு, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, வனத்துறையினர் கும்கி யானைகளையும், கால்நடை மருத்துவர்களையும் வரவழைத்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து யானை மீது அமர்ந்து துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் வலையை வீசி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். இந்த சிறுத்தைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவேதான் எளிமையான இறைகளை தேடி தேடி இது வேட்டையாடுகிறது. பொதுவாக புலிகள் கூட இப்படி ஆட்கொல்லியாக மாறுவதுண்டு. மனித இரை எளிமையாக கிடைக்கும் என்று ஒருமுறை தெரிந்துவிட்டால், அடுத்தடுத்த முறை மனிதர்களையே இந்த விலங்குகள் டார்கெட் செய்யும்.
தற்போது பிடிக்கப்பட்ட சிறுத்தையும் இப்படி மாறியிருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். எனவே இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு பதிலாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,
"மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சிறுத்தைகள் வசித்தாலும், அவை மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஒருசில விதி விலக்காக இப்படி மனித வேட்டையாடிகளாக மாறுகின்றன. மனித-வன விலங்கு மோதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications