அதிர்ச்சி வைத்தியம்.. வைத்தியலிங்கத்தை தட்டித் தூக்கிய செங்கோட்டையன்! தவெகவுக்கு டெல்டாவில் தெம்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் நாளை விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் மீது அதிருபதியில் இருந்த வைத்தியலிங்கத்துடன் திமுகவில் சேர்ந்த மனோஜ் பாண்டியன் பேசியதாக தகவல் வெளியான நிலையில், இதனை தெரிந்து கொண்ட செங்கோட்டையன், உடனடியாக அவரிடம் பேசி தவெக இணைய வைக்க சம்மதிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை வைத்தியலிங்கம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் சமீபத்திய மிகப்பெரிய அரசியல் பிளவு என்றால் அது செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதுதான். கோபிசெட்டி பாளையத்தில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு என அதிமுகவினர் சொன்னாலும் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழகம் அறிந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்.
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக செங்கோட்டையன் இருந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கும் செங்கோட்டையனும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன்
அதே நேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. அதே கோரிக்கையை முன்வைத்து பேசிய செங்கோட்டையன் தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதே கையோடு நேராக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் வரவு தமிழக வெற்றி கழகத்திற்கு பலம் கூட்டும் என்பதையும் மறுக்க முடியாது.
எடப்பாடிக்கு நெருக்கடி
அதே நேரத்தில் அதிமுகவில் அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்த செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இரண்டு முன்னாள் அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேசி வருகிறார் எனவும் தகவல்கள் உலாவின. இந்நிலையில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தவெகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் டெல்டா பகுதியில் செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் கிளர்ச்சி எழுந்தபோது அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஆனால் பின்னர் ஓபிஎஸ் அணியின் அரசியல் நடவடிக்கைகள் மந்தமாகி, அதிமுக மீண்டும் ஒன்றிணைய முயற்சியும் கைகூடவில்லை. புதிய கட்சி தொடங்குவதாக ஓபிஎஸ் பல முறை கூறியபோதும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வைத்திலிங்கம் அரசியல் முடிவெடுக்க வேண்டிய நிலை உருவானது. ஓபிஎஸ் அணியில் தொடர்ந்தும் இருப்பதால் எந்த அரசியல் பலனும் கிடைக்காது என்பதால், அவர் புதிய கட்சியை தேடி வந்ததாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த மாற்றத்திற்கும் முன் திமுகவும் வைத்திலிங்கத்தை அணுக முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக டெல்டா பகுதியில் திமுகவுக்கு போட்டியாக நிற்கக்கூடிய வலுவான தலைவர்கள் குறைவான நிலையில், வைத்திலிங்கம் திமுகவுக்கு பயனுள்ளதாக இருப்பார் என்பதால் அவரை அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த முயற்சியை செங்கோட்டையன் தடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தலைமையிலான தவெக ஒரு புதிய கட்சி என்பதால் அங்கு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவையாக இருந்த சூழலில், செங்கோட்டையன் வருகை கட்சிக்குள் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது.
விஜய் கட்சி வளர்ச்சி
இப்போது வைத்திலிங்கமும் சேர்வதால் டெல்டா பகுதியில் தவெகக்கு கணிசமான பலம் கிடைக்கும். திமுக டெல்டாவில் பெற்றிருக்கும் வாக்கு வலிமையை ஓரளவு சரிசெய்யக்கூடியவர் வைத்தியலிங்கம் என்பதால், அவரை தவெக பக்கம் வரச் செய்வது விஜய்க்கு ஒரு முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. கொங்கு பகுதியில் செங்கோட்டையன், டெல்டாவில் வைத்திலிங்கம், வடதமிழகத்தில் புதிய முகங்கள் என, தவெக தனது அரசியல் முன்னேற்றத்திற்கு திட்டமிட்டு சில நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், வைத்தியலிங்கம் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது தான் தற்போதைய கேள்வி.












Click it and Unblock the Notifications