ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டி.. ஓ பன்னீர்செல்வம் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்தா? பரபர தகவல்
சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். அதிமுகவின் இரட்டை இலையில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஓ பன்னீர் செல்வத்தின் பதவிக்கு தற்போது சுயேட்சையாக போட்டியிடுவதன் மூலம் சிக்கல் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கலும் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அரசியல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவர 4 முனை போட்டி நடக்கிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதில், அனைத்து கட்சிகளுமே போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டன.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்தடுத்து தமிழக அரசியலில் பின்னடைவே ஏற்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கியது, பின்னர் கட்சி, சின்னம், கொடிகளை பயன்படுத்தக்கூடாது என அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு என கூறி வந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பாஜக கூட்டணியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட தோல்வி அடையாத ஓ பன்னீர் செல்வம், இதனால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளார். தனது ஆதரவினை நிரூபிப்பதற்காக ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் தற்போது எம்எல்ஏவாக இருந்துகொண்டு லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது எதாவது ஒரு கட்சியில் இருந்துகொண்டு வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். எனவே ஓ பன்னீர் செல்வத்திற்கும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என சொல்லப்பட்டது.
ஆனால் அவர் தற்போது அதிமுகவில் உறுப்பினர் பதவியில் கூட இல்லாததால், எம்எல்ஏ பதவியை இழக்க மாட்டார் என்று சட்ட வல்லுனர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுகவில் இல்லை. அந்த கட்சி ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டது. எனவே அவர் சட்டமன்றத்திலேயே அவர் ஒரு சுயேட்சை உறுப்பினராகத்தான் இருக்கிறார்.
அவர் அதிமுக உறுப்பினர் இல்லை. எனவே ஒரு சுயேச்சை உறுப்பினர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது என்பது கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி தடை ஆகாது. அவர் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் ஹவுஸ்புல்லான தொகுதிகள்! தமிழக மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை?
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலும், அல்லது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டாலும் மட்டுமே அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதே செல்லாது என்று கூறி ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவிற்கும் உரிமை கோர முடியாது என்பதாலேயே அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் வெற்றி பெற்றால், அவராகவே எம்எல்ஏ பதவியை துறந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications