Bawaria: பவாரியா கொள்ளையர்களை பிடிக்க சீனுக்குள் வந்த நிஜ "தீரன்" ஜாங்கிட்! தமிழக டிஜிபிக்கு கடிதம்
சென்னை: "பவாரியா கொள்ளை கும்பல் ஒழிக்கப்படாமல் உள்ளதால் ஜாமீனில் வெளியே சென்று தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு படைகளை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார்.

பவாரியா கொள்ளையர்கள் என அழைக்கப்படுவோர் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கி, கொன்று கொள்ளையடித்து வந்தனர். இவர்கள் தமிழகத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டனர்.
அநத் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த சுதர்சன் வீட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளையடிக்க பவாரியா கொள்ளையர்கள் வந்த போது, அவர்களை பார்த்து சுதர்சனம் கூச்சலிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். சுதர்சனம் மட்டுமல்லாமல் மேலும் 12 பேரை கொன்ற அந்த கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்குமாறு உத்தரவிட்டு அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்தார்.
இந்த தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பவாரியா கொள்ளை கும்பல் குறித்து டிஜிபி வெங்கட்ராமனுக்கு, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "நாங்கள் கைது செய்த பவாரியா கொள்ளையர்கள் 13 பேரில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அந்த 4 பேரில் பவாரியா கொள்ளை கும்பல் தலைவன் ஓமா, வேலூர் சிறையில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
மற்ற மூவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். மற்ற 9 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். அந்த 9 பேர் மீதும் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. பவாரியா கொள்ளையர்களுக்கு உதவி செய்த அந்த கும்பலை சேர்ந்த 21 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களையும் கைது செய்ய வேண்டும். பவாரியா கொள்ளையர்கள் குறித்து கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை மறுவிசாரணை செய்து 6 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொள்ளையர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தந்தோம்.
நாங்கள் 3 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்தாலும் இன்னும் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகள் மீது சில ஆண்டுகளாக அக்கறை காட்டாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. சுதர்சனம் கொலை வழக்கில், சில ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன. சில ஆவணங்களை மீண்டும் உருவாக்க வேண்டியிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது.
பவாரியா கொள்ளையர்கள் குறித்த வழக்குகள் எல்லாவற்றையும் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்க வேண்டும். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை மீண்டும் கைது செய்ய வேண்டும் என ஜாங்கிட் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications