அண்ணா அறிவாலயம் வந்த சித்தராமையா.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்தித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஆண்டுதோறும் அம்பேத்கர் கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு 'அம்பேத்கர் சுடர்' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது விழாவில் கலந்துகொள்ளும்படி சித்தராமையாவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், அம்பேத்கர் சுடர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்று கொள்வேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சென்னை வந்தார். இவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் சித்தராமையா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து சித்தராமையா கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications