மதிமுகவில் இருந்து தவெகவுக்கு ‘டைவ்’ அடித்த மாவட்ட செயலாளர்.. பதவிக்காக தாவலா? வெளியிட்ட விளக்கம்
சென்னை: மதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்தவர் நாகராஜ். இவர் மதிமுகவில் இருந்து விலகி, தவெக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பல ஆண்டுகளாக மதிமுகவின் முக்கிய தூணாக அறியப்பட்ட நாகராஜ், தவெகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டவர் நாகராஜ். மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, வைகோவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது அதனை பகிரங்கமாக எதிர்த்து, மதிமுக தொண்டர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் அணிதிரண்டுள்ளதாகக் கூறியவர் நாகராஜ்.

பல ஆண்டுகளாக மதிமுகவின் முக்கிய தூணாக அறியப்பட்ட நாகராஜ், தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகியுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். இது மதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி மாறியது பற்றி விளக்கம் அளித்துள்ளார் நாகராஜ்.
நாகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 33 வருடங்களாக நான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சிக்காக என்னுடைய வாழ்வை அர்ப்பணித்து செயல்பட்டு வந்திருக்கிறேன். அனைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் பங்கேற்று இருக்கிறேன். என்னுடைய உழைப்பு, விசுவாசம் அனைத்தும் இந்தக் கட்சிக்காகத்தான் இத்தனை காலமும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், சமீப காலமாக இந்தக் கட்சியில் எனது சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பல ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிட்டது. அதனால் தான் எனக்கு ஒரு மாற்றம் தேவை என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தேன்.
மற்றபடி, தலைமை மீதோ, நான் இருந்த கட்சி மீதோ எந்தவிதமான விரோத உணர்வும் எனக்கு இல்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட சுயமரியாதையையும், நான் சந்தித்த சில அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்ட முடிவு. சில இடங்களில் சில சூழ்நிலைகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்தது.
நான் பதவிக்காகவோ அல்லது பதவி ஆசைக்காகவோ இந்த மாற்றத்தை செய்யவில்லை என்று தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பலரும் இது குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருந்தீர்கள். உண்மையிலேயே பதவிக்காக நான் செயல்பட்டிருந்தால், 2006-இல் திருப்பூர் நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்றபோது என்னை திமுகவில் இணைய அழைப்பு வந்தபோதே அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பேன். ஆனால் அப்போது நான் மறுத்ததின் காரணமாக நான் வென்ற சேர்மன் பதவியே பறிக்கப்பட்டது.
அதற்குப் பிறகும் பல நேரங்களில் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதும், அவை மறுக்கப்பட்டபோதும் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சமீப காலமாக எனது சுயமரியாதையை பாதிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்ததால்தான் இந்த மாற்றத்திற்கான முடிவை எடுத்தேன். எனவே, நான் பதவிக்காக இந்த முடிவை எடுத்தேன் என்ற குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது.
மாற்றத்தை விரும்புவதும் வரவேற்பதும் தவறு இல்லையே? 33 ஆண்டுகாலம் இந்த மறுமலர்ச்சி பயணத்தில் என்னோடு களமாடிய, எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அத்தனை மறுமலர்ச்சி உறவுகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடனான நட்பும், உறவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications