அதிமுகவுக்கே “டைவ்” அடித்த மைத்ரேயன்.. மீண்டும் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி பெற்ற முன்னாள் எம்.பி மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் டாக்டர் மைத்ரேயன். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார்.
அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இதனால், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, அதிமுகவில் இருந்து மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பிலும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்து வந்த மைத்ரேயன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி முன்னிலையில், பாஜகவில் மீண்டும் இணைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனாலும், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி டாக்டர் மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து மைத்ரேயனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் என்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டன் சென்றுள்ள நிலையில், மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications