திருமணங்களில் அண்ணாமலை தரும் வித்தியாசமான கிப்ட் என்ன தெரியுமா? டிரெண்டாகுதே!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மணமக்களுக்கு பூங்கொத்து கொடுப்பதும் ஒரு சிறப்பு பரிசையும் கொடுத்து வருகிறார். அது என்ன என்பது தெரியுமா? திருமணம், விசேஷங்களுக்குச் செல்ல சிறப்பு பரிசை அவர் தயாரித்து கொண்டு செல்கிறார். இது தற்போது டிரென்டாகி வருகிறது.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்கு வந்த அமித்ஷா, அண்ணாமலை எங்கே என கேட்டாராம். இதே கேள்வியை ஜேபி நட்டாவும் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின. அது போல் அண்ணாமலை தலைவராக இருந்த போது சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டதாக சொல்லப்பட்டன. அவரது பதவிக்காலத்தில் கே.டி.ராகவன் பாலியல் புகாரில் சிக்கி ஓரங்கட்டப்பட்டார். தற்போது அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை அதிமுகவுடன் மோதல் போக்கை கொண்டிருந்தார். அக்கட்சியுடன் இணக்கமாக செல்ல அண்ணாமலைக்கு டெல்லி பாஜக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தை அண்ணாமலை தவிர்த்தார்.
டெல்லிக்குச் செல்லாமல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அன்றைய தினம் 11 திருமணங்களுக்கு சென்றிருந்தாராம். இந்த நிலையில் அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக சொல்லப்பட்ட போதிலும் அவர் சென்று வந்த கல்யாணங்கள் பேசப்படுகின்றன.
அண்ணாமலை சென்ற திருமணங்களில் அவர் கொடுக்கும் பரிசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி பரிசை கொடுக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
அதாவது திருமணம் என்றாலே மங்களகரம்தான். அதை வெளிப்படுத்தும் விதமாக மஞ்சள் பொடியை தம்பதிகளுக்கு அண்ணாமலை கொடுத்து வருகிறார். இதற்காக நல்ல மஞ்சளை விவசாயிகளிடம் வாங்கி, அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து மஞ்சளை கொடுக்கிறார். இதனால் திருமண வீட்டார் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திருமண வாழ்க்கை மங்களகரமாக மஞ்சளில் ஆரம்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக மஞ்சளை பரிசாக கொடுக்கிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications