“லஞ்சம் வாங்குறதுக்காகத்தான் இந்த மசோதா.. ஆளுநரை அவங்களுக்கு பிடிக்காது” - கொந்தளித்த பாலகுருசாமி!
சென்னை: துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் முடிவுக்கு கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாலகுருசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
பி.இ அரியர் ரத்துக்கு எதிராக பாலகுருசாமி மனு - அரசு, யுசி,ஜி ஏஐசிடிஇ பதில் தர ஹைகோர்ட் உத்தரவு

துணை வேந்தர்கள் நியமனம்
தமிழ்நாடு உட்பட பெரும்பாலான பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை அந்தந்த மாநில ஆளுநரே நியமித்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கிறது.
துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசே நியமிக்கும்
சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநருக்கு செக் வைக்க திமுக அரசு திட்டமிட்டது. மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க அறிவித்தது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாலகுருசாமி
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான பாலகுருசாமி, துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா தேவை இல்லாதது. துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. தற்போதைய தமிழக ஆளுநரை தமிழக அரசுக்குப் பிடிக்காது என்பதால் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாலகுருசாமி.

அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
அந்த அறிக்கையில், மாநில அரசே துணைவேந்தர்களை நியமித்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும். கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நியமனங்களில் கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது.
வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். ஆளுநர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதே, தமிழ்நாடு அரசின் புதிய மசோதாவுக்கு காரணம் என பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

நியமனத்தில் லஞ்சம்
பல்கலைக்கழக பதிவாளர்கள், பேராசிரியர்கள் உட்பட பல்கலைக்கழக பதவிகளுக்கு 5 லட்சத்தில் இருந்து 3 கோடி வரை லஞ்சம் கொடுப்பது கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளதாகவும் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
சிண்டிகேட் உறுப்பினராவதற்கு 2 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், பதிவாளர்கள், கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு 3 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், பேராசிரியர்கள் நியமனத்தில் 60 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.