பண ஆசை காட்டி வலை.. சென்னையில் கோடிகளை குவித்த தம்பதி! பலருக்கு "கல்தா' கொடுத்தவர் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையில் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் வலைவிரித்த கணவன் மனைவி, சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை ஆவடி சைபர்கிரைம் போலீசார் தம்பதியை கைது செய்துள்ளனர்.
சமீப நாட்களாகவே இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு பின்னர் கூண்டோடு தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வந்தாலும், புதிய புதிய கோணத்தில் நூதனமாக மோசடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி இருந்தாலும், கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவதில் மயங்கி பின்னர் பணத்தை ஏமாந்து விடுகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை கொளத்தூரில் அரங்கேறியுள்ளது. பார்ப்பதற்கு டிப் டாப்பாக இருந்து கொண்டு கணவன் மனைவி தம்பதியினர், இந்த மோசடி சம்பவத்தை நடத்தியுள்ளனர். எங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூடி சுமார் 6 கோடி பணத்தை அபேஸ் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னை செங்குன்றம் சோலையம்மாள் பகுதியில் வசித்து வந்தவர் விக்னேஷ் (வயது 35). இவரது மனைவி ரேகா (33). இந்த தம்பதியினர் ஆன்லைன் வர்த்தகம் தொழில் செய்து வருவதாக வெளியில் கூறியுள்ளனர். மேலும் தங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இப்படி அப்பகுதியில் உள்ளவர்களை பிரைன் வாஷ் செய்துள்ளனர்.
இதனை உண்மை என நம்பி சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி ஆசாத் தெருவை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான கலைவாணன் (34) என்பவர், விக்னேஷிடம் நான் இதில் முதலீடு செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். முதலில் குறைவான ரூபாய் முதலீடு செய்ததாகவும் இதற்கு இரட்டிப்பு பணம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இவர் வங்கியில் கடன் வாங்கி ரூ.1 கோடியே 10 லட்சத்தை விக்னேஷிடம் கொடுத்து இருக்கிறார்.

முதலீடு செய்த கொஞ்ச நாட்களில் கலைவாணனுக்கு பணம் அக்கவுண்டில் கிரெடிட் ஆகியுள்ளது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பணம் கிரெடிட் ஆகாமல், அதற்கு முறையான காரணங்களையும் சொல்லாமல் விக்னேஷ் - ரேகா தம்பதி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பயந்து போன கலைவாணன் தம்பதியின் வீட்டிற்கு சென்று பார்த்தார். ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். செல்போனிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைவாணன் இது தொடர்பாக சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வலைவீசி தேடியதில் விக்னேஷ் - ரேகா தம்பதியினர் வந்தவாசி அருகே செம்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் அந்த தம்பதியினர் இதேபோல் பலரிடம் தங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.6 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் ரேகா தம்பதியினர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சைபர் கிரைம் போலீசார் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தப்பிக்க எண்ணற்ற வழிமுறைகளை கூறியுள்ளனர். எனினும் ஒருசிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களிடம் நம்பி எளிதில் ஏமாந்துபோய்விடுகிறார்கள். பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவோம் என்று கூறினால் முதலில் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். யாருக்கும் பணம் கொடுப்பதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தல் வழங்கினர்.












Click it and Unblock the Notifications