ஓபிஎஸ் - இபிஎஸ் "சண்டை" டூ பாஜக "ஆபாச அர்ச்சனை" வரை.. 2022 தமிழ்நாட்டின் டாப் அரசியல் "டுவிஸ்டுகள்"
சென்னை: 2022 ஆம் ஆண்டு நம்மைவிட்டு பிரிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அந்த ஆண்டில் பல்வேறு திருப்பங்களை தமிழ்நாடு அரசியல் சந்தித்தது. ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் தொடங்கி தமிழ்நாடு பாஜகவில் சமீபத்தில் வெடித்து பூதாகரமாகி இருக்கும் உட்கட்சி மோதல் வரை பல அரசியல் திருப்பங்கள் இந்த ஆண்டில் ஏற்பட்டு உள்ளன.
இப்படி பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும் தமிழ்நாட்டு ஊடக விவாதங்களில் பங்கேற்கும் மூத்த பத்திரிகையாளர்களின் பார்வையில் முக்கியமான அரசியல் திருப்பங்கள் எது என்று பார்க்கலாம்.
இதில் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல்களையே பெரும்பாலும் சுட்டிக்காட்டினர். இதை கடந்து சில நிகழ்வுகளை தெரிவித்துள்ளனர். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மூத்த பத்திரிகையாளர் மணி
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவிக்கையில், "ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை என நினைக்கிறேன். போன டிசம்பரில் எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது. ஓபிஎஸை எடப்பாடி வெளியேற்றியதை தவிர்த்து இருக்க வேண்டும். எடப்பாடிக்கு கட்சியும் செல்வாக்கும் உள்ளது. ஆனாலும், ஓபிஎஸை அவர் அரவணைத்து சென்று இருக்கலாம். இது எதிர்பார்க்காத தமிழ்நாடு அரசியலுக்கு நலம் தராத விரும்பத்தகாத நிகழ்வு." என்றார்.

எஸ்.பி. லட்சுமணன்
இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், "2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அதிமுகவின் செயற்குழுவை கூட்டி அதன் விதிமுறைகளை திருத்தி பலருடைய எதிர்ப்புகளையும் தாண்டி அவர்கள் வசதிக்காக செய்தார்கள், என்ற விமர்சனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எடப்பாடியும் ஓபிஎஸும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஒற்றை வாக்கின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தங்கள் பதவியை அவ்வளவு தூரம் பாதுகாத்துக் கொண்டார்கள். அவ்வளவு செய்தும் 6 மாதத்திற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிளவை இவ்வளவு விரைவாக நான் எதிர்பார்க்கவில்லை." என்றார்.

சுமந்த் ஸ்ரீ ராமன்
இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன், "எதிர்பாராத சம்பவங்கள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. கிட்டத்தட்ட பெரும்பாலானவை கணிக்கப்பட்டன. ஆனால், என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு மோடி எதிர்ப்பு என்பது இவ்வளவு குறுகிய காலத்தில் பெரும் அளவில் குறையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முழுமையாக விலகியதாக நான் சொல்லவில்லை. பாஜகவை மக்கள் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கவில்லை." என்றார்

பத்திரிகையாளர் சமஸ்
மூத்த பத்திரிகையாளர் சமஸ் அளித்து உள்ள விளக்கத்தில், "கள்ளக்குறிச்சி சம்பவத்தை சொல்லலாம். இது இவ்வளவு பெரிய கலவர சூழலாக மாறியதற்கு காரணம், தமிழ்நாடு காவல்துறை, உளவுத்துறையின் நிர்வாக ரீதியான தோல்விதான். மற்றுமொரு எதிர்பாராத சம்பவம் என்றால் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு. அந்த இடத்தில் காவல்துறை தெளிவாக செயல்பட்டார்கள்." என்று கூறினார்.

ஜெகதீஸ்வரன்
பத்திரிகையாளர் ஜெகதீஸ்வரன் பேசுகையில், "பாஜக பல மாநிலங்களில் என்ன வேலை செய்கிறார்கள்? பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் என்ன செய்தார்கள் என்பதை பார்த்தோம். அதே வேலையை பாஜக 2022 ல் செய்வார்களா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் அதிமுக அதற்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறார்களோ? பாஜகவை வளர்ப்பதற்கான வேலைகளை பார்க்கிறார்களோ? ஒருபக்கம் எடப்பாடியோடு சாதமாக போவதைபோல் அண்ணாமலை பேசினாலும், அதற்கான இடம் கிடைத்துவிட்டது என்பதை நோக்கி வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். இதுதான் எதிர்பாராதது." என்றார்.

பத்திரிகையாளர் பரத்
இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் பரத், "பாஜகவில் நடந்த உட்குழப்பங்கள் எதிர்பார்க்காத விசயம். கோட்பாடுகளால் கட்டப்பட்ட கட்சி என்று சொல்லப்பட்ட பாஜகவில் திடீரென, எதிர்பார்க்காத சில குற்றச்சாட்டுகள் வந்தன. வெளியில் ஒழுங்கு நடவடிக்கை என்று சொன்னார்கள். ஆனால், கடந்த 2 மாதங்களாக அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் எதிர்பாராதது. அதேபோல் கேடி ராகவன் தொடங்கி உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் வளர்ந்த கட்சிக்கு வரும் பிரச்சனைகள் பாஜகவுக்கு வருகிறது. இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்று பேசும் பாஜகவில் இது ஆச்சரியமளிக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications