முத்திரை பதித்த முதல் மாநாடுகள்.. அண்ணா To விஜய் வரை! சுவாரஸ்ய தகவல்கள்
சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் முதல் மாநாட்டை எங்கே நடத்தின. அப்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் என்ன? திமுக தொடங்கி தவெக வரை ஒரு கழுகுப் பார்வையில் இந்தக் கட்டுரை அலசுகிறது.
1949இல் திமுகவை தொடங்கிய அண்ணாதுரை அக்கட்சியின் முதல் மாநாட்டைச் சென்னையிலிருந்த எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் 1951 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 தொடங்கி 16 வரை மொத்தம் 4 நாட்கள் நடத்தினார். மாநில மாநாட்டில் அண்ணாதுரை சொற்பொழிவாற்றினார். கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே திமுகவுக்குள் புகைச்சல் மூண்டது. ஆகவே, இந்தக் கட்சி தாக்குப் பிடிக்காது என்று சிலர் சொன்னார்கள். அந்த வதந்திக்கு மாநாட்டில் பதிலளிக்க முன்வந்த அண்ணாதுரை, "இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நெருக்கடியில் நிச்சயம் சிதறி விடும், சுக்கு நூறாகி விடும் திராவிட இயக்கம் என்றே எல்லாரும் எதிர் பார்த்தனர். ஆனால் உங்களது நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது.

நீங்கள் கடைப்பிடித்த ஒற்றுமையே இன்று இந்தப் பெரிய சக்தியாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் என்னிடங் கொண்டுள்ள பற்றும், காட்டும் பாசமும் கண்டு பூரிப்படைகிறேன். அந்தப் பாசத்திற்கு கட்டுப்பட்டவனே தவிர, கட்டளையிடுபவனுமல்ல - வழி காட்டுபவனுமல்ல! நீங்கள் என்மேல் வைத்துள்ள நம்பிக்கை கெடாமல், இதுவரை நடந்து வந்துள்ளேன். எதிர்காலத்திலும் நடந்து கொள்வேன்" என்று தனது அரசியல் எதிரிகளை எச்சரித்திருந்தார் அண்ணாதுரை. கதர் சட்டையுடன் காந்தியின் பக்தராகவும் காங்கிரஸ் அனுதாபியாக இருந்து வந்த எம்.ஜி.ராமசந்த் 1950 பிற்பகுதியில் மு.கருணாநிதியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். கருணாநிதிதான் ராம்சந்த் என்ற பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றியதாக ஒரு கருத்து திமுக வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பெயர் மாற்றத்திற்குத்தான் சொன்ன யோசனையே காரணம் என நடிகர் நம்பியார் அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.
அந்தக் காலத்தில் புகழ் மிக்க வசனகர்த்தாவாக வலம் வந்த மு.கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர் நெருங்கி பழகிய பிறகு கதர் சட்டையைக் கழற்றி விட்டு கருப்பு சட்டைக்கு மாறினார். காந்தி பக்தரான அவர் அண்ணாதுரையின் அபிமானியானார். அதன் பின்னர் மு.கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. 1952 தொடங்கி அவர் தனிக்கட்சி முடிவை எடுக்கும் வரை திமுகவில் சக்தி வாய்ந்த நடிகராக வலம் வந்தார்.
அண்ணாதுரையே எம்.ஜி.ஆரின் புகழ் கட்சி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளதை என்ற கருத்தை ஏற்றார். கருணாநிதிக்கும் இவருக்கு ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவையே எடுத்திருந்தார். திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 2 நாட்கள் அவர் தனிமையிலிருந்தார் என்று அவரது உதவியாளரே வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், நிலைமை தலைகீழானது. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். பலர் உணர்ச்சி வேகத்தில் ஆர்ப்பரித்தனர். அப்போதும் கூட எம்.ஜிஆர் அரசியலில் மீண்டும் வருவது குறித்து தயங்கினார்.
தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் தனியே ஒரு கட்சியை தொடங்காமல், அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒரு தொண்டனின் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக அறிவித்தார். பின்னால் அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆர் கையில் வந்தது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே அதிமுக கொடியை ஏற்றி அதிமுகவை உலகிற்கு அறிமுகம் செய்தார் எம்ஜிஆர்.
அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் திமுக கருப்பு சிவப்பு கொடிக்கு நடுவில் வெள்ளை தாமரையைப் பதித்து பலர் ஊர்களில் கொடி ஏற்றிக் கொண்டாடினர். அதன் பிறகு அதிமுக கொடியில் அண்ணாதுரையின் உருவம் பொறிக்கப்பட்டது. கட்சியின் கொள்கையாக 'அண்ணாயிஸம்' என்ற ஒன்றை எம்.ஜி.ஆர். முன்வைத்தார். அதற்காக விளக்கம் என்ன என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக வை. கோபால்சாமி யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகளை ரகசியமாகச் சந்தித்ததாகப் புகார் எழுந்தது. அந்தக்கால அரசியலில் கள்ளத்தோணியில் கோபால்சாமி பயணம் செய்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக தலைமைச்செயலாளரிடம் இருந்து மு.கருணாநிதியைக் கொல்ல சதி நடப்பதாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து வை.கோபால்சாமி ஊடகங்களைச் சந்தித்தார். கருணாநிதியே 'என்னை வை.கோபால்சாமி கொல்ல திட்டமிட்டுள்ளார்' என பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி திமுகவிலிருந்து வை.கோபால்சாமி நீக்கப்பட்டார். இவர் திமுகவில் செல்வாக்கு மிக்க பேச்சாளராக வலம் வந்தபோது வை. கோபால்சாமி என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள் சென்னை நடிகர் சங்கத்தில் கோபால்சாமி தலைமையில் திமுகவிலிருந்து பிரிந்துவந்த தலைவர்கள் கூடி ஆலோசித்தனர். அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சி பிறந்தது. அதன் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. வை.கோபால்சாமி நடைப்பயணம் மேற்கொண்டார். இந்தக் கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
அதற்குப் பிறகு வை.கோபால்சாமி தனது பெயரை சட்ட முறைப்படி வைகோ என மாற்றிக் கொண்டார். எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட போது கூட அக்கட்சி மிகப்பெரிய பிளவை சந்திக்கவில்லை. ஆனால், வைகோ வெளியேற்றப்பட்ட போது கட்சி செங்குத்தாகப் பிளந்தது என்று அன்றைக்கு ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. அந்தளவுக்கு அவருக்கு ஆதரவாளர்கள் இருந்தனர்.
வைகோவைப் போலவே திமுக மற்றும் கருணாநிதியின் அனுதாபியாக ஆரம்பிக் காலத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விஜயகாந்த், கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தோற்றுவித்தார். அதற்கு அவரது கல்யாண மண்டபம் இடிப்பு விவகாரம் முக்கிய காரணமாக அமைந்தது. அதாவது செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தேமுதிக முதல் மாநில மாநாட்டை மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். அங்கே 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். இந்தக் கூட்டத்தில் 14 வெண் புறாக்களைப் பறக்கவிட்டார்.

விஜயகாந்த் திரைத்துறைக்குள் 1978இல் நுழைந்தார். அப்போது அவருக்கு கம்யூனிஸ்ட் சாயம் பூசப்பட்டது. பின்னர் கருணாநிதிக்கு விழா எடுத்துத் தங்கப் பேனா பரிசு கொடுத்த காலத்தில் அவர் திமுகவின் அனுதாபி என்பதைத் தாண்டி கருணாநிதியின் தீவிர விசுவாசியாக இருந்தார். சுமார் 22 ஆண்டுகள் அவர் திரை வாழ்வில் ஒரு பகுதியாக அரசியல் பேசி வந்தார். ரசிகர்களைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வந்தார். ஒரு காலத்தில் விஜயகாந்த்தின் நண்பராகவும் வலது கரமாகவும் இருந்த சரத்குமார் தேமுதிக தொடங்கப்பட்ட 2 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டு அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி, மாநாட்டைத் திருச்சியில் மாநாட்டை நடத்தினார். அதற்கு முன்பாக இவர் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளில் பயணித்தார்.
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து முத்துக்குமார் தீக்குளித்து இறந்துபோனார். அப்போது திமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துவந்தது. ஈழப்படுகொலைக்கும் மு.கருணாநிதியே காரணம் எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சீமான், அமீர் உள்ளிட்ட திரையுலகினர் போராடினர். அதனால் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனையொட்டி வெளியே வந்த சீமான் உள்ளிட்ட சில தலைவர்கள் சேர்ந்து 2010 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினர். அதன் ஒருங்கிணைப்பாளராகச் சீமான் இருந்தார். மீண்டும் மே 18, 2010இல் இயக்கமாக இருந்ததை நாம் தமிழர் கட்சியாக மாற்றி அறிவித்தார்.
திராவிட கட்சிகளின் தொடர்பு இல்லாமல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட கட்சியில் முக்கியமானது பாட்டாளி மக்கள் கட்சி. 1980 ஜூலை 20 ஆம் தேதி 'வன்னியர் சங்க'மாக தொடங்கப்பட்டது இந்தச் சங்கம் தமிழ்நாட்டில் பல போராட்டங்களை நடத்தி ஸ்தம்பிக்க வைத்தது. சங்கமாக இருக்கும் போதே வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு 1980 ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் மாநாட்டை நடத்தியது. 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டம் இன்றுவரை பேசப்பட்டும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
அதன் தொடர்ச்சியாக 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இந்தச் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்தது. அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. 1992இல் சென்னையில் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினார் ராமதாஸ். அப்போது விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக இவர் இருந்தார்.

இந்த அரசியல் கட்சிகளின் வரலாற்றின் தொடர்ச்சியாக இப்போது விஜய் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், விக்கிரவாண்டி விஜய்யின் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தைப் பெற உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாது. செல்வாக்கு மிக்க கட்சியாக தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் விக்கிரவாண்டி ஒரு பெரிய முத்திரையைப் பதிக்கும்.












Click it and Unblock the Notifications