Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுவன் அப்துல்கலாம் முதல் சிறுமி டான்யா வரை! - ஸ்டாலின் தந்த சர்ப்ரைஸ் பரிசுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஆட்சி மாறினால் காட்சி மாறும்' என்பார்கள். ஆனால் அப்படி நடந்திருக்கிறதா? என்றால் பெரிதாக நம்மிடம் பதில் இல்லை. முதன்முறையாக இன்று 'ஏழை சொல்' அம்பலம் ஏறும் ஆட்சியைத் தமிழகம் கண்டிருக்கிறது. வீடு தேடிப் போய் உதவும் ஒரு முதலமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது.

இது ஏதோ வாய்வார்த்தை இல்லை. மறுக்க முடியாத உண்மை.

கொரோனா இரண்டாவது அலை முடிந்த பிறகு தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்கியது. அப்போது கன்னியாகுமரி பக்கம் கீழ கலுங்கடி என்ற ஒரு சிறு கிராமத்தில், அரசு அளித்த ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் பிடித்துக்கொண்டு பொக்கை வாய்த் தெரிய ஒரு பாட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அந்தப் படம் அன்பு உள்ளம் கொண்ட அத்தனை மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 வைரலான பாட்டிக்கு வீடு

வைரலான பாட்டிக்கு வீடு

உடனே யார் இந்தப் பாட்டி என சமூக வலைத்தளம் முழுக்க தேடுதல் வேட்டை நடந்தது. பிறகு அவர் வேலம்மாள் பாட்டி எனக் கண்டுபிடித்தனர். இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினே அவரது ட்விட்டர் பக்கத்தில் பாட்டி படத்தை வெளியிட்டு, "இந்த ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு" என வர்ணித்திருந்தார்.

அதன் பிறகு கன்னியாகுமரிக்கு மழை சேதத்தினை பார்வையிடப் போன ஸ்டாலின் அந்தப் பாட்டியை நேரில் சந்தித்தார். இப்போது பாட்டி வேலம்மாளுக்கு வீடு இல்லை என சில நாள்கள் முன்பாக ஒரு செய்தி பரவியது. பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசை எதிர்மறையாக விமர்சிக்கலாம் எனத் திட்டமிட்டபோது உடனே அந்தப் பாட்டிக்கு அரசு வீட்டை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின்.

வீட்டைப் பெற அரசுக்குப் பாட்டி 75 ஆயிரம் ரூபாய்க் கட்ட வேண்டிய நிலை. அந்தத் தொகையையும் திமுகவைச் சார்ந்த தொண்டர் பூதலிங்கம் ஏற்றுக் கொண்டு, வீட்டுக்கான உரிய ஆவணத்தைப் பாட்டியிடம் ஒப்படைத்தார்.

இதைப் போலக் காட்சியை இதற்கு முன்னர் தமிழகம் கண்டதில்லை. ஏதோ காவல்துறை அதிகாரி ஒருவர், ரவுடியினால் வெட்டிக் கொல்லப்பட்டால் அரசு தரப்பில் ஒரு கோடி நிதி உதவி என்ற செய்தியை மக்கள் படித்திருப்பார்கள். சாதாரண ஒரு ஏழைப் பாட்டிக்கு இந்த மாதிரி அரசு சலுகை எல்லாம் எட்டாக்கனி. அதை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

இது ஏதோ ஒரு சம்பவத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து ஒரு கதை. தனது மகள் விநோதமான முகச்சிதைவு நோயினால் தவிக்கிறாள் என ஆவடியைச் சேர்ந்த டான்யாவின் தாய் செளபாக்யா அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறார். அடுத்த நொடி அந்தச் செய்தி அரசாங்கத்தின் செவிக்குப் போய்ச் சேர்கிறது.

 சிறுமியின் முகத்தை மாற்றிய ஸ்டாலின்

சிறுமியின் முகத்தை மாற்றிய ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலினே போய் அந்தச் சிறுமியைச் சந்திக்கிறார். அடுத்த நொடி அறுவைச் சிகிச்சை. அதுவும் உயர்தரமான சிகிச்சை. கண்ணீர் மல்க அந்தத் தாய் தனது மகளின் துயரம் ஒருநொடியில் மறையும் என நினைக்கவே இல்லை எனப் பேட்டி கொடுக்கிறார். சிகிச்சை முடிந்து டான்யா வார்டுக்கு திரும்புவதற்குள் மீண்டும் நேரடியாகச் சென்ற ஸ்டாலின், "ஸ்கூலுக்குப் போகலாமா? வலி இருக்கா? இதற்கு தானே ஆசைப்பட்ட?" என அன்பாகக் கேட்கிறார். இதையும் தமிழ்நாடு இதுவரைப் பார்த்ததில்லை.

 மனவளர்ச்சி குன்றிய கொள்ளுப்பேத்தி

மனவளர்ச்சி குன்றிய கொள்ளுப்பேத்தி

இன்னொரு கதையைக் கேளுங்கள். கல் நெஞ்சத்தையும் கரைக்கும் கொடூரமான சோகம் நிரம்பிய கதை இது. பெருங்களத்தூரைச் சேர்ந்த முதியவர் முருகேசன். ஆசை ஆசையாகப் பேத்திக்குக் கல்யாணம் செய்து வைத்த கையோடு விவாகரத்தைச் சந்திக்கிறார். காரணம் பேத்திக்குப் பிறந்த பெண் குழந்தை. அதுவும் மனவளர்ச்சி குன்றிய குழந்தை. கொன்று போட முயற்சி நடக்கிறது. அதைத் தடுத்து, கடந்த 14 ஆண்டுகளாகக் கொள்ளுப்பேத்தியை எடுத்து வளர்த்து வருகிறார் இந்த முருகேசன்.

இன்று பேத்தி வயதை எட்டிவிட்டாள். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். கூலி வேலைக்குப் போகும் போது அவளைக் கவனிக்க ஆள் இல்லை எனக் கண்ணீர் வடிக்கிறார் முருகேசன். முதல்வர் காதுக்குச் செய்தி உரிய முறையில் மனுவாகப் போகிறது. இப்போது பேத்தியை உரிய மனநலக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இதற்கு முதலமைச்சர்தான் காரணம்.

உண்மையில் இந்தக் கதைகள் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றனவா? பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். காரணம், ஏழைகளின் பிரச்சினையைக் காதுகொடுத்துக் கேட்பது அரசின் வேலை இல்லை என்பதை தங்களின் கசப்பான அனுபவங்களின் மூலம் மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். ஆகவே சோர்ந்துவிட்டனர். இந்நிலையில்தான் இப்போது ஸ்டாலின் செய்பவை எல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

மீண்டும் இன்னொரு இன்னல் கதை. இவர் பாடி பகுதியைச் சேர்ந்தவர். அங்கே பூ வியாபாரம் செய்கிறார் மீனா. ஒரு மகன் உண்டு. கணவர் இருக்கிறார். ஆனால் மீனாவுக்கு ஒரு கைதான் இல்லை. ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு முன்பே அந்தப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்க வந்துள்ளார்.

 மீனாவின் சோகக் கதை

மீனாவின் சோகக் கதை


அப்போது மீனா ஒரு கோரிக்கை கடிதத்தை அரை நம்பிக்கையோடு ஸ்டாலினிடம் தந்துள்ளார். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற உடன் சி.எம். செல்லிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் தேவை என்ன என்று கேட்டுள்ளனர் அதிகாரிகள். பூக்கடைப் போட வங்கிக் கடன் கேட்டுள்ளார்.

இன்று மீனா பூக்கடை முதலாளி. நம்ப முடியவில்லையா? வேறு வழியே இல்லை. இப்போதாவது நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இது தமிழ்நாடேதான்.

இந்தக் கதைகளும் போதுமானதாக இல்லையா? தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாட்டி லட்சுமியின் கதையைப் படியுங்கள். பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும் இறந்துவிட்டனர். வேறு ஆதரவு இல்லை. அந்தப் பாட்டி வீடுவீடாகப் போய் முறைவாசல் வேலை செய்கிறார். பத்து பாத்திரம் கழுவி, அந்த வருமானத்தில் வீட்டுக்காரரைக் காப்பாற்றி வருகிறார்.

என்ன செய்வது? யாரிடம் முறையிடுவது? இந்தக் காலத்தில் நம்மைக் காப்பாற்ற யார் வருவார் எனக் கண்ணீர் வடித்த பாட்டிக்குப் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு தேவதை வந்துள்ளார். அவர் தன் கைப்பட அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். முகவரியிலிருந்த பெயரைப் பார்த்து வைஷ்ணவிக்கு அதிகாரிகள் பேசி உள்ளனர்.

 ஆதரவு இல்லாத லட்சுமி பாட்டி

ஆதரவு இல்லாத லட்சுமி பாட்டி

அந்த லட்சுமி பாட்டி எனக்குச் சொந்தமில்லை. ஆனால் அவர் படும் துயரைச் சகிக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். இன்று உரிய முறையில் உதவித் தொகையைப் பெறுகிறார் லட்சுமி பாட்டி. இரண்டு நாளில் இந்த அற்புதம் நடந்துள்ளது.

இப்போது புரிகிறதா? ஆட்சி மாறிவிட்டது. காட்சியும் மாறிவிட்டது. அதற்கு அதிக சாட்சிகள் இருக்கின்றன. முன்பு ஒரு சிறுவன் அப்துல்கலாம். 'ஒற்றுமை இல்லாத நாடு என்ன நாடு? என்னைக் கூட பல்லா பல்லா எனப் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் நான் யாரையும் வெறுக்கவில்லை" என்றான் அந்தப் பையன். அடுத்த நாள் அப்துல்கலாம் குடும்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்தார். வீடு இல்லை என அறிந்து சென்னை கே.கே நகரில் வீடு கொடுத்தார்.

 வைரல் பையன் டு வசதியான பையன்

வைரல் பையன் டு வசதியான பையன்

வைரல் பையன் வசதியான பையனாக மாறினான். சின்ன வயதிலேயே தனக்கான அறிவை நிரூபித்து ஸ்டாலின் கையால் வீடு வாங்கினான். மதங்களைக் கடந்த மனிதநேயத்தைத் தமிழ்நாடு முதன்முறையாகக் கண்டது.

இப்படி நெகிழ்ச்சியான கதைகள் இன்னும் தொடர்கின்றன. அசராமல் முதலமைச்சர் ஸ்டாலின் பலரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைப் படைத்துக் கொண்டே இருக்கிறார். புதிய ஆட்சி... கண்கொள்ளாக் காட்சி.. என மாறி வருகிறது இந்த அமேசிங் தமிழ்நாடு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+