அரசு கல்லூரி பேராசிரியர் தொடங்கி அமைச்சர், திமுக துணைப் பொதுச்செயலாளர் வரை.. யார் இந்த பொன்முடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் அமைச்சர் க.பொன்முடி. திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை பொன்முடியிடம் இருந்து பறித்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது அமைச்சர் பதவியையும் பறிப்பதற்கான தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

திமுகவில் இன்றைக்கு சீனியர்களாக இருக்கக் கூடியவர்கள் துரைமுருகன், டிஆர் பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி. இவர்களுக்கு அடுத்த சீனியர் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர்தான் அமைச்சர் க.பொன்முடி.

ponmudi dmk stalin

யார் இந்த பொன்முடி?

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி, பல்வேறு பட்டங்களைப் பெற்று அரசு கல்லூரி பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அன்றைய திமுகவினரைப் போல திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், நாத்திக பிரசாரம் என ஒரு காலத்தில் தீவிரம் காட்டியவர்தான். திமுகவின் மாணவரணியிலும் பணியாற்றினார்.

இன்றைக்கு விழுப்புரம் திமுக என்றாலே பொன்முடிதான் என்கிற குறுநில மன்னராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். பொன்முடிக்கு முன்னதாக விழுப்புரம் திமுகவின் முடிசூடா மன்னராக இருந்தவர் முதுபெரும் திராவிடர் இயக்க தலைவரான செஞ்சியார் எனும் செஞ்சி ராமச்சந்திரன். அவரது தயவில்தான் 1989-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே பெற்றார் பொன்முடி. அப்போது செஞ்சியார், விழுப்புரம் மாவட்ட செயலாளர்.

வளர்க்கப்பட்ட பொன்முடி

எந்த ஒரு அரசியல் கட்சியுமே எப்போதுமே, ஒரு மாவட்டத்தில் ஒருவர் தலையெடுத்தால் அவருக்கு போட்டியாக இன்னொருவரை கொம்பு சீவிவிட்டுக் கொண்டே இருக்கும்.. இது அரசியல் கட்சிகளில் எழுதப்படாத விதி. விழுப்புரம் திமுகவிலும் அசைக்க முடியாத மனிதராக இருந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கு சவால்விடும் வகையில் பொன்முடியை உருவாக்கியது திமுக மேலிடம். இதனால் முதல் முறை எம்.எல்.ஏ.வான உடனேயே அமைச்சர் பதவியும் கிடைத்துவிட்டது. அன்றில் இருந்து விழுப்புரம் திமுகவில் பொன்முடியின் 'ராஜாங்கமும்' தொடங்கிவிட்டது. விழுப்புரம் திமுகவில் தமக்கான செல்வாக்கையும் கட்டமைக்க தொடங்கினார் பொன்முடி.

வெளியேறிய செஞ்சியார்

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு பின்புலமாக திமுக தலைமையே இருப்பது கண்டு நொந்தும் வெந்தும் போய்தான், வைகோ, மதிமுகவை தொடங்கிய போது அரும்பாடு பட்டு வளர்த்த திமுகவை விட்டே வெளியேறினார் செஞ்சி ராமச்சந்திரன்.

பொன்முடியின் அத்தியாயம்

அண்ணன் எப்போது... திண்ணை காலியாகும்? என்கிற கதையாக காத்திருந்த பொன்முடிக்கு, செஞ்சியாரின் வெளியேற்றம் பெரும் பலம் சேர்த்துவிட்டது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக விழுப்புரம் திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வேரூன்றிவிட்டார் பொன்முடி. திமுகவில் 'ஸ்டாலின் ஆள்' என முத்திரை குத்தப்பட்டவர்களில் பொன்முடியும் ஒருவர் என்பது அக்கட்சியினர் நன்கறிந்த ஒன்றுதான்.

பொன்முடிக்காக போராடிய ஸ்டாலின்

பொன்முடி தமது அதிகாரம் மூலம் கல்வி நிறுவனங்கள் முதல் குவாரிகள் என ஏகத்துக்குமான சொத்துகள் குவித்தார். இதனாலேயே சொத்து குவிப்பு வழக்கில் மனைவியுடன் சிறை தண்டனையும் பெற்று அமைச்சர் பதவியையும் பறிகொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் போராடி அமைச்சர் பதவியை பொன்முடிக்கு வாங்கிக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

அதீத பேச்சால் அமைச்சர் பதவியும் அம்போ?

இப்போது, நந்தனவத்தில் ஒரு ஆண்டி கதையாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார் பொன்முடி. திராவிடர் கழகம்- பகுத்தறிவாளர் கழகம் காலத்தில் நடைபெற்ற பட்டிமன்றம் ஒன்றை பற்றிப் பேசப் போய் இப்போது பொன்முடியின் அரசியல் அத்தியாயமே முடிவுக்கு வருகிறது என்கிற நிலைமைதான். இது முதல் முறையும் அல்ல.. எத்தனையோ முறை திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அதீதமாக பேசியவர் பொன்முடி. சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய போது ஒருமையில் திட்டியவர். இதனால் பொன்முடிக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடிவாளம் போடவும் தொடங்கியது திமுக தலைமை

பொன்முடி vs லட்சுமணன்

இதன் முதல் கட்டமாகவே விழுப்புரம் திமுகவில் பொன்முடிக்கு எதிராக, எம்.எல்.ஏ. லட்சுமணன், திமுக தலைமையால் களமிறக்கப்பட்டுவிட்டார். . விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக லட்சுமணனை திமுக தலைமை நியமித்ததை கொஞ்சமும் ரசிக்கவில்லை பொன்முடி தரப்பு. ஆனாலும் திமுக தலைமை பொன்முடியின் அதிருப்தியையும் கண்டு கொள்ளாமல் லட்சுமணன் பக்கமே நின்று வருகிறது.

பட்டமரமாகும் பொன்முடி

தற்போது பொன்முடியும் கட்சிப் பதவியும் காலியாகிவிட்டது. இதனையடுத்து அமைச்சர் பதவியும் பறிபோக இருக்கிறது. விழுப்புரம் திமுகவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை சக்தியாக தம்மை வளர்த்துக் கொண்டிருந்த பொன்முடி என்கிற பெருமரம் பட்டுப் போகும் காலமாகிவிட்டது- வாய் துடுக்காலும் எதேச்சதிகார போக்காலும் என்பது மிகையல்ல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+