அழவைத்த தாமு முதல் ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணு வரை... பள்ளிக்கல்வித்துறை அலப்பறைகள்
சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் பள்ளிக்கல்வித்துறை சந்தித்த சர்ச்சைகள் என்ன? அதற்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் என்ன? ஏன் இது தொடர்கதையாகி உள்ளது?
பள்ளிக்கல்வித்துறையா? இல்லை பஞ்சாயத்துத் துறையா எனச் சந்தேகம் எழும் அளவுக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தபடி உள்ளன. உஷாராக இருக்க வேண்டிய துறை ஏனோ அதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும் அளவுக்கு நாங்குநேரி சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. வள்ளியூரைச் சேர்ந்த சின்னதுரை வீட்டில் உறங்குக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் வெட்டி வீசப்பட்டார். அவர் பிழைப்பாரா? என்ற அச்சத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த விபத்து பற்றிப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனது சொந்த செலவில் சின்னதுரையைப் படிக்கவைப்பேன் என்றார். அரசாங்கம் இருக்கும்போது உங்களது சொந்த செலவில் ஏன் படிக்கவைக்க வேண்டும்? அந்த மாணவனுக்கும் குடும்பத்திற்கும் என்ன உத்தரவாதம்? என சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் எழுந்தன.
அதன்பின்னர் இந்த ஆண்டு சின்னதுரை உயிர்பிழைத்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விசயம் தலைப்புச் செய்தியாக மாறியது. அதைப்போன்றுதான் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கைகளில் சாதியைக் குறிப்பிடும் வகையில் வண்ணக் கயிறுகளைக் கட்டிவருவதாகப் புகார் எழுந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட இந்த விவகாரம் பேசப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அதைப் பற்றி எந்தவித அறிவிப்பும் வராமல் இருக்கவே பலரும் கேள்வி எழுப்பினர்.பின்னர் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போதும் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதுதான் பலரது பார்வையும் விழுந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேச நடிகர் தாமு, தன்னம்பிக்கை பேச்சு என்ற பெயரில் மாணவ, மாணவிகளைக் கதறி அழ வைத்தார். பெற்றோர்களைப் பற்றிய உன்னதமான தியாகங்களை மாணவர்களுக்குச் சொல்லி தருவதாகக் கூறி, தாமு ஏதோ மாணவர்களைக் குற்ற உணர்வில் மூழ்க வைத்து கண்ணீர் வடிக்கவைத்தார். அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. அவர் செய்வது சரியா? இது என்ன மாதிரியான தன்னம்பிக்கை என்று நெட்டிசன்கள் போட்டு வகுந்து எடுத்தனர்.
அது பற்றி விளக்கம் அளித்த தாமு, "இந்த விமர்சனங்கள் வரத்தான் செய்யும். சவுக்கடி போலத்தான் இவை. இதைத் தாங்கிக் கொண்டு நான் போய்க் கொண்டே இருப்பேன்" என்று கொஞ்சம் கூட தவறை உணராமல் நியாயப்படுத்தினார். அதன்பின்னர் அது குறித்து பள்ளிக்கல்வித்துறை உஷார் ஆனது. ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. மீண்டும் அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணுவுக்கு சிகப்பு கம்பளம் வரவேற்பு அளித்ததன் மூலம் கோட்டைவிட்டுள்ளது. இறுதியாகத் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளார் அமைச்சர் எனப் பலரும் விமர்சிக்கின்றன. மேலும் மகாவிஷ்ணு என்பவர் அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூக ஊகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.
இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோதே மதுரை புத்தகக்கண்காட்சிக்கு அழைத்துவரப்பட்ட மாணவிகள் அங்கே சாமியாடிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. ஒரு புத்தகக்கண்காட்சிக்கு ஏன் பேய் ஓட்டுபவர்களை எல்லாம் அழைத்து வந்து பாடவைக்கிறார்கள் என நெட்டிசன் பொங்கி எழுந்தனர். அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் மூர்த்தி, அது கிராமிய நிகழ்ச்சி என்று சொல்கிறார். பெண் பிள்ளைகள் பள்ளிச் சீருடையுடன் சாமி ஆடுகிறார்கள். அதற்கு உரிய விளக்கம் கொடுக்கப்படவே இல்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சீட்டுக்கட்டு ஆடுவதைப் போல படம் அச்சடிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. அதைக் கண்டித்து அன்புமணிகூட அறிக்கை விட்டிருந்தார். இதே ஆண்டு ஜனவரி மாதம் அரியலூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமானது. இப்படித்தான் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்று சர்ச்சையானது. தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு நியமித்த ஒருவரை பாஜக ஆதரவாளர் என பிறகு பள்ளிக்கல்வித்துறை நீக்கியது. அந்த விவகாரமும் சர்ச்சையானது.
தொடர் சர்ச்சைகள் பற்றிப் பேசி உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் முன்பே அது குறித்து உயர் அதிகாரிகள் விவாதித்து இருப்பார்கள். அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றது முதலே சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. தேர்வு தேதி அறிவிப்பது முதல் மகாவிஷ்ணு விவகாரம் வரை அது தொடர்கிறது" என்று கவலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications