"கால் வைக்கிற இடமெல்லாம் வெடிக்குதே".. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து கேட் போட்ட திமுக.. திணறும் தாமரை?
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி என்றுதான் சொல்ல வேண்டும்.. ஒரு பக்கம் சீனியர்களின் எதிர்ப்பு காரணமாக அண்ணாமலை சிரமப்பட்டு இருக்கிறார்.. இன்னொரு பக்கம் திமுகவின் இளம் நிர்வாகிகள் சிலரும் அண்ணாமலைக்கு போகிற இடத்தில் எல்லாம் கேட் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
டேய் இவன் போற இடமெல்லாம் கேட் போடுடா என்று காமெடி ஒன்றில் வடிவேலு சொல்லுவார்.. அதுதான் பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்த அந்த கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்பதுதான் உண்மை.
அதற்கு பாஜக தமிழ்நாட்டில் வலிமை இல்லாமல் இருந்தாலும் கட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இருக்காது. அமைதியான மிடில் பென்ச் ஸ்டூண்ட் போலத்தான் பாஜக இருந்து கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அடாவடியான லாஸ்ட் பென்ச் ஸ்டூடன்ட் போல பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அண்ணாமலை பாஜக
பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சரான காரணத்தால் அண்ணாமலை திடீரென மாநில தலைவர் பொறுப்பிற்கு வந்தார். எச். ராஜா, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் என்று பல மூத்த தலைவர்கள் இருந்த போதிலும், கட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகாத அண்ணாமலைக்கு நேரடியாக பாஜக தமிழக தலைவர் ஆனார். கர்நாடக சிங்கம்.. ஸ்டிரிக்ட் ஆபிசர் என்றெல்லாம் அண்ணாமலையை புகழ இணையத்தில் ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருந்தது. இருந்தாலும் அண்ணாமலை மீது தற்போது கட்சியின் டாப் நிர்வாகிகளே கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அண்ணாமலைக்கு எல் முருகனுக்கும் உறவு சரியில்லை என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலையை கண்காணிக்கவே எல் முருகனுக்கு கமலாலயத்தில் புதிதாக ஒரு அறை வேறு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கும் பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு கேடி ராகவன் பெண் ஒருவருடன் பேசும் ஆபாசமான வீடியோ ஒன்றை அண்ணாமலையிடம் பாஜக நிர்வாகி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் காட்ட, அதில் அண்ணாமலை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தார். கடைசியில் கேடி ராகவன் வீடியோ, இது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உட்பட அனைத்தும் இணையத்தில் கசிந்தது. இந்த விவகாரத்தில் கடைசியில் கேடி ராகவன் பாஜகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அதில் இருந்து மொத்தமாக அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் கேடி ராகவனை ஓரம்கட்ட வேண்டும் என்று அண்ணாமலை செயல்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டது. கேடி ராகவன் மீது அண்ணாமலைக்கு இருந்து கோபம் காரணமாக இந்த வீடியோவை அண்ணாமலை தடுக்கவில்லை என்றெல்லாம் ஆதாரமற்ற விவாதங்கள் கூட அப்போது எழுந்தன.

கேடி ராகவன் அண்ணாமலை
சமீபத்தில் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் மௌனம் கலைத்தார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது., என்று கூறினார். அதன்பின் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது.இதில் கேசவ விநாயகம் , எல் முருகன் மீது திருச்சி சூர்யா நேரடியாக புகார்களை வைத்தார். இது போக வானதி சீனிவாசன், எச் ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் அண்ணாமலை மீது அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பாஜக கட்சிக்கு உள்ளேயே டாப் நிர்வாகிகள் அண்ணாமலை மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.

திமுக
இன்னொரு பக்கம் திமுகவும் அண்ணாமலை போகிற இடங்களில் எல்லாம் கேட் போட்டுகொண்டு இருக்கிறது. திமுகவின் மூத்த உறுப்பினர்கள் யாரும் அண்ணாமலையை கண்டுகொள்வதே இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை விமர்சனம் செய்து இருந்தாலும் கூட.. ஒரு இடத்தில் கூட அண்ணாமலை பெயரை சொன்னதே இல்லை. சம்பந்தப்பட்ட நபர் என்று கூறித்தான் விமர்சனம் செய்கிறார். மற்றபடி மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட இளம் தலைவர்கள்தான் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் அண்ணாமலை அடுத்தடுத்து சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்.

வாட்ச் விவகாரம்
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல மேடைகளில் குறிப்பிடும் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது. இந்த வாட்ச் வாங்கிய பில் எங்கே என்று திமுகவினர் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையோ பில்லை ஏப்ரல் மாதம் கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார். இந்த விவகாரம்.. தன்னை நேர்மையானவன்.. ஏழை என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலைக்கு மிகப்பெரிய கரையாக மாறி உள்ளது.

அண்ணாமலை
கோவையில் பாஜக சார்பாக வழங்கப்பட்ட இந்த காது கேளாதோருக்கான கருவியின் விலை 10000 ரூபாய் என்று அண்ணாமலை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அந்த கருவி 345 ரூபாய்க்கே ஆன்லைனில் கிடைப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டு வைத்து அண்ணாமலையை பிளந்து எடுத்தனர். அண்ணாமலை பேச்சை உற்று கவனித்து இந்த பொய்யை கண்டுபிடித்தனர். "காதுகள் பாவம் இல்லையா?" என்று அண்ணாமலையை திமுக ஐடி விங்கும் கடுமையாக விமர்சனம் செய்தது. கடைசியில் வேறு வழியின்றி, செயற்கை கால்களை பாஜக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது; காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர்.

அரிமா சங்கம்
அரிமா சங்கம் காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது.. ஆனால் 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக நமக்கு தெரிய வந்தது. அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை தமிழா பாஜக வழங்கும். அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக தமிழக பாஜக செய்யும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். திமுக இவர் பேசியதில் உள்ள தவறை கண்டுபிடித்த நிலையில் அண்ணாமலை இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களாக இப்படி அண்ணாமலை போகிற இடமெல்லாம் கன்னிவெடியாக வெடிப்பதால் பாஜக கட்சியினரே அரண்டு உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications