மகாநதி முதல் குணா வரை.. 10 வருடம் தாமதமாக வந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும் கமல் படங்கள்
சென்னை: மகாநதி, குணா , அன்பே சிவம், ஆளவந்தான், ஹேராம் உள்ளிட்ட கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சில படங்கள் 10 வருடங்கள் கழித்து அல்லது அதன் பிறகு வந்திருந்தால் அதன் வசூலும் சரி , வரவேற்பும் வேறுமாதிரி இருந்திருக்கும்.
உலக நாயகன் என்று தமிழ் சினிமாவில் போற்றப்படும் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எடுத்த முயற்சிகள் மிக அபாரமானது. மக்களுக்கு ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதை தாண்டி, அதை எப்படி நுணுக்கமாக சொல்ல வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார். கமலின் சில படங்கள் கமர்சியல் என்ற பாதையை தாண்டி பல ஆண்டு காலம் போற்றக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் வசூல் என்பது பெரிதாக இருந்திருக்காது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து 15 வருடங்கள் கழித்தோம் கமலின் அந்த படங்களை பார்க்கும் போது இப்படிப்பட்ட படத்தை நாம் பார்க்காமல் விட்டோமே என்று ஏங்க வைக்கும். தமிழ் போன்ற மிகப்பெரிய ஹீரோ, கமர்சியல் என்ற ஒற்றை பாதையில் செல்லாமல் தனித்துவமான பாதையில் சென்றதன் விளைவாக இன்றும் நாம் பல படங்களை ரசித்து வருகிறோம்அந்த படங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மகாநதி திரைப்படம் என்பது 1990களில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. சீட்டு கம்பெனியில் பணம் போட வைத்து ஏமாற்றும் ஹனீபாவை நம்பி கமல் ஏமாறுவார். வாழ்க்கையில் ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு குடும்பத்தின் நிலையை முற்றிலும் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதற்கு உதாரணமாக இந்த படம் இருக்கும். சிறைச்சாலைகள் எவ்வளவு மோசமான மனித உரிமை மீறல்களை செய்வோம் என்பதையும் , அதிகார வர்க்கம் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் என்பதும் மகாநதியில் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கும். சிறைக்கு சென்று திரும்பும் கமல் தன் மகனை களை கூத்தாடியிடம் இருந்தும் , மகளை விபச்சார விடுதியில் இருந்தும் மீட்பார். மிக கனமான வலியை சொல்லும் இந்த படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. அன்றைய காலகட்டத்தில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதே படம் 2004 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு வெளியாகி இருந்தால், கதை அழுத்தத்திற்கு கண்டிப்பாக மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் .
குணா இந்த படத்தை இன்றும் பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள். குணா பாறை கொடைக்கானலின் அடையாளமாக இன்று மாறிப் போய்விட்டது . மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காதலி மீது வைத்துள்ள அளவற்ற பற்று , அதனால் அவர் எதிர்கொண்ட சிக்கல், காதலிக்காக நடந்து கொண்ட விதங்கள் என அன்றைக்கு பார்த்தவர்களுக்கு நிச்சயம் என்ன படம் என்று யோசிக்க தோன்றியிருக்கும். ஆனால் இன்றைக்கு இந்த படத்தை பார்த்தால் என்ன படம் என்று ஆச்சரியத்துடன் யோசிக்க தோன்றியிருக்கும். இந்த படம் வெளியான போது இருந்த வரவேற்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இப்போது இந்த படத்தையும் , படத்தின் பாட்டையும் பார்க்கும் அந்த காலத்து ஆட்களுக்கு ஏதோ ஒரு வித இனம் புரியாத உணர்வு வந்து செல்கிறது. குணா போன்ற அழுத்தமான கனமான கதாபாத்திரத்தில் கமல் தான் மீண்டும் நடிக்க முடியும். வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தில் இனி நடிக்க கூட முடியாது என்கிற எண்ணம் ஏற்படும்.
அன்பே சிவம் .. இந்த படம் ஏன் ஓடவில்லை என்று இன்றுவரை இயக்குனருக்கும் சரி நடிகர் கமலஹாசனுக்குமே சரி புரியாத புதிராகவே தெரியும். அன்பே சிவம் படம் இப்போது அல்லது ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் . கலகலப்பு ,அண்ணாமலை அரண்மனை படம் எடுத்த சுந்தர் சி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இன்றைக்கு இந்த படத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அவ்வளவு அற்புதமான கதை களத்துடன் இருக்கும் படமாகும்.
அன்பே சிவம் என்ற வார்த்தையைகூட அன்பே சிவம்தான் முதன்முதலில் தமிழகத்தில் உச்சரித்துவிட்டு போனது. அந்தவகையில், இந்த காலக்கட்டத்துக்கு மட்டுமல்ல, இன்னும் நூறு வருட காலத்துக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களை அன்பே சிவம் படத்தில் நாம் காணலாம்.
கமல்ஹாசன் நடிக்கும் வெளியான ஆளவந்தான் திரைப்படம் , இன்றைக்கு பேசப்படுகிறது அதிக அளவில்.. இப்படி எல்லாம் ஒருவர் நடிக்க முடியுமா என்று கேள்விகளை அடுக்கடுக்காக கேட்க தோன்றுகிறது.. ஆளவந்தான் திரைப்படமும் இன்றைக்கு வந்து இருந்தால் வேற லெவலில் ஓடி இருக்கும்.
இதற்கு காரணம் நிராகரிப்புகளால் மனநலம் பாதிக்கப்பட்ட நந்துவை போலவே, இன்றும் எத்தனையோ பேர் அரவணைப்பின்றி பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.. சைக்கோ மனநிலைக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.. இதனால் ஏற்படும் வன்முறைகளும் எக்கச்சக்கம்.. அந்தவகையில், ஒவ்வொரு மனிதருக்கும் அரவணைப்பின் அவசியத்தை ஆளவந்தான் உணர்த்திவிட்டு போனது.
ஹேராம் திரைப்படம் இன்றைய காலகட்டத்திற்கு ஆக சிறந்த திரைப்படம்.. கமலின் நடிப்பும் வலுவான கதைக்களமும் கதையின் போக்கும் நிச்சயம் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று இருக்கும்.
படம் வெளிவருவதற்கு முன்பே, இந்துத்துவா கொள்கையை கமல் தூக்கி பிடிக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நின்றன... மகாத்மா காந்தியை விமர்சிக்கிறார் என்று காங்கிரஸார் கொந்தளிக்கவும் செய்தனர்.. தியேட்டர் முன்பு போராட்டமும் செய்தனர்... ஆனால், உண்மையிலேயே இந்தியப் பிரிவினையை ஹே ராம் போல எந்த படமும் சொல்லியது இல்லை.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கமல் வலியுறுத்தினார் என்றே பெருமையாக சொல்லலாம்.. இந்த ஒற்றுமை இன்று மட்டுமல்ல, காலகாலத்துக்கும் தேவைப்படக்கூடியவை...
மேற்கண்ட படங்கள் இப்படித்தான் வாழ்க்கையை சொல்லிவிட்டு போயிருக்கிறது..
இப்படித்தான் வலியையும், சொல்லி விட்டு போயிருக்கிறது..
ஆனாலும் சமூகம் மாறாமல் இந்த படங்களிலில் இருந்து பாடம் கற்க வேண்டிய இருக்கிறது..!!












Click it and Unblock the Notifications