ராமதாஸ் செய்த அந்த சத்தியம்.. எத்தனை முறை தான் மீறுவார்? அப்பா - மகன் அதிகார மோதல் பின்னணி!
சென்னை: 1989 ஆம் ஆண்டு பாமகவை தொடங்கும்போது அதன் நிறுவனர் ராமதாஸ், 5 சத்தியங்களைச் செய்தார். அதில் முக்கியமானது, 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என்பது. ஆனால், அவரது மகன் அன்புமணி பாமக தலைவர் ஆனார். மருமகள் சௌமியா, எம்.பி வேட்பாளர் ஆனார், இப்போது பேரன் முகுந்தன், பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ் செய்த 5 சத்தியங்கள்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட 1989 ஜூலை 16 ஆம் தேதி டாக்டர் ராமதாஸ், 5 சத்தியங்களைச் செய்தார். 1. எந்தக் காலத்திலும் கட்சியிலும், சங்கத்திலும் பதவி வகிக்க மாட்டேன், 2. பொதுக் கூட்டங்களுக்கு, சுற்றுப் பயணங்களுக்குச் சொந்த செலவில்தான் வருவேன், 3. எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். என் செருப்புகூட சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்குள் நுழையாது, 4. என் வாரிசுகள் கட்சியில் எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள், 5. பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, ஸ்விஸ் பேங்கில் ஆயிரம் கோடி ரூபாய் போடுவதாகச் சொன்னாலும் சரி, ராமதாஸ் விலை போகமாட்டான் என சத்தியம் செய்தார் ராமதாஸ்.
தான் சொன்னபடியே, ராமதாஸ் கட்சியில் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. கட்சியை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், தலைவர் பதவியில் வேறு நபர்களே இருந்தனர். 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என அன்றைக்கு அடித்துச் சொன்ன ராமதாஸ், பின்னாளில் தனது மகன் அன்புமணியை கட்சிக்குள் கொண்டு வந்தார். அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்கி, மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.
உள்ளே வந்த அன்புமணி
பின்னர், அன்புமணியை இளைஞரணி தலைவராகவும், அதன் பின்னர் கட்சியின் தலைவராகவும் கொண்டு வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாமக தலைவராகச் செயல்பட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ். அதன் தொடர்ச்சியாக, மருமகள் சௌமியா அன்புமணியை கடந்த லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட வைத்தார்.
இந்நிலையில் தான், தனது குடும்ப வாரிசை மீண்டும் பெரிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார் ராமதாஸ். பாமக இளைஞரணி தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை இன்று நியமித்துள்ளார் ராமதாஸ். கட்சி தொடங்கும்போது தான் செய்த சத்தியத்தை தொடர்ந்து மீறிக் கொண்டே இருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
இந்தச் சூழலில் தான், பாமகவில் இளைஞரணித் தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே இன்று பொதுக்குழு மேடையிலேயே மிகப்பெரிய கருத்துமோதல் வெடித்துள்ளது.
முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்த நிலையில், மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் அன்புமணி. "கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது நியாயமா? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்" எனக் காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார் அன்புமணி.
ராமதாஸ் டென்ஷன்
இதனை கேட்டு டென்ஷனான ராமதாஸ், "நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியே செல்லுங்கள்" என ஆவேசமாக கூறினார். அதற்கு அன்புமணி, சரி பண்ணுங்க பண்ணுங்க.. என ஆதங்கத்தை மறைத்துக்கொண்டே சிரித்தபடியே கூறினார். அதற்கு, என்ன சரி... சரியென்றால் போ அப்போ.." என்று எகிறினார் ராமதாஸ்.
தொடர்ந்து ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். முகுந்தன் பரசுராமன் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கை தட்டுங்கப்பா..." என்றார். அப்போது, குடும்பத்துல இன்னொருத்தரைப் போடுங்க" என்று கூறிவிட்டு ஆவேசமாக மைக்கை கீழே போட்டார் அன்புமணி. தொடர்ந்து மைக்கை எடுத்துக் கொண்டு எழுந்த அன்புமணி தொண்டர்களைப் பார்த்து, சென்னை பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறேன். என்னை அங்கு வந்து சந்திக்கலாம்" என்றார்.
வெளியே போ
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், "உங்களை இன்னொரு அலுவலகம் திறந்து கொள்ளுங்கள், நடத்துங்கள் என்றுதானே கூறுகிறேன். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் உனக்கு விருப்பம் இல்லை என்றால்... அவ்வளவுதான். நான் ஆரம்பித்த கட்சி இது. விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும்" என்று கூறினார் ராமதாஸ். அதையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார் அன்புமணி.
திமுகவை குடும்பக் கட்சி என விமர்சிப்பார்கள். பாமகவில் அன்புமணி தலையெடுத்தவுடன், பாமகவால் அந்த விமர்சனம் செய்ய இயலாமல் போனது. மாற்று நாங்களே என கோஷம் வைக்கும் நாமே அடுத்தடுத்து, குடும்பத்தினரை கட்சிக்குள் கொண்டு வருவது சரியல்ல என்பது அன்புமணியின் எண்ணம். முகுந்தன் பரசுராமனை கட்சியில் சேர்த்தபோது அன்புமணி அதற்கு எதிர்ப்பு காட்டிய நிலையில், இன்று மொத்தமாக கொந்தளித்துவிட்டார்.
ரெடியாக வந்த அன்புமணி
முகுந்தன் பரசுராமனை ராமதாஸ், முக்கியத்துவம் மிக்க பதவியில் எப்படியும் அமர்த்தி விடுவார் என்பது அன்புமணிக்குத் தெரிந்தே, அவர் பனையூரில் அலுவலகம் ஒன்றை தயார் செய்துவிட்டார். எல்லாவற்றிற்கும் ரெடியாகவே இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு வந்துள்ளார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலேயே, தனது தந்தையின் செயலுக்கு எதிர்ப்பையும் காட்டிவிட்டார் அன்புமணி.
தனது வாரிசுகளுக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கமாட்டேன் என சத்தியம் செய்த ராமதாஸ் அதனை பல முறை மீறினார். இப்போது, தனது வாரிசு மூலமாகவே, தனக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications