சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம்
சென்னை: அதிமுக, திமுக என மாறி மாறி குதிரை சவாரி செய்துவந்த பாமக, 2016 தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம்' என புதிய பிரச்சார மேடையைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது. அதிமுக, திமுகவுக்கு அடுத்து மூன்றாவது கட்சியாக பாமக உருவெடுத்து இருந்தது. ஆனால் அதனால் எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியாமல் போனது.
2016 சட்டமன்றத் தேர்தல் வரை திராவிட கட்சிகளைக் கடந்து வேறு பக்கம் தமிழக வாக்காளர்களின் பார்வை திரும்பியதே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதை முதன்முறையாக அன்புமணி ராமதாஸ் இந்தத் தேர்தலில் உடைத்தார். 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற அவரது Corporate Campaign ஒரு கவன ஈர்ப்பை உண்டாக்கியது. வழக்கமான அரசியல்வாதிகளைப் போல் வேஷ்டி சட்டையில் இல்லாமல், பேண்ட் சட்டையில் 'டக் இன்' செய்துகொண்டு ஒரு கார்ப்பரேட் அதிகாரியைப் போலத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

"44 வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவை அங்குள்ள இளைஞர்கள் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் இங்கும் ஓர் இளைஞருக்கு வாய்ப்புக் கொடுங்கள்" என்றார் அன்புமணி. அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை. 2004இல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அவர் மத்திய சுகாதார அமைச்சராகப் பதவியில் உட்கார்ந்த போது அவரது 36 வயது. எந்த அரசியல் முன் அனுபவமும் இன்றி அவர் நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வந்தார்.
பற்றி எரிந்த சிகரெட் சர்ச்சை
அப்போதே அவர் மீது ஒரு வெளிச்சம் விழுந்திருந்தது. அமைச்சரானதும் நாடே அவர் உண்டாக்க இருந்த சட்டத்தால் 'புகை'ந்தது. சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்குத் தடைவிதிக்கப் போவதாக ஒரு 'மாற்ற'த்தை முன்வைத்தார். 2002இல் 'பாபா' படம் வெளியானபோது, அதன் போஸ்டரில் ரஜினி புகைப்பதைப்போன்ற காட்சியை எதிர்த்து பாமக போராட்டம் செய்தது. அது ரஜினி Vs பாமக என்ற மோதலை உண்டாக்கியது.
அதன்பின் மத்திய அமைச்சரான அன்புமணி ராமதாஸ், சிகரெட் விவகாரத்தைக் கையில் எடுத்தார். சினிமா என்பது சமுகத்தின் எதிரொளி. யதார்த்தம் என்னவோ அதைத் திரையில் பிரதிபலிக்கும். சிகரெட் பிடிப்பது என்பது ஒரு நொடியில் தோன்றி மறையக்கூடிய காட்சி. மனித உணர்வுகளைப் படமாக்கும்போது அதன் கூறுகள் இருக்கத்தானே செய்யும் எனத் திரை விமர்சகர்கள் தீர்ப்பு உரைத்தனர். சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் சிகரெட் சார்ந்த காட்சிகள் மிகப் பிரபலம்.
ஜவஹர்லால் நேரு புகைப்படம் பிடிக்கும் புகைப்படம் வரலாற்றில் பிரசித்தம் பெற்றது. அவர் எட்வினாவின் சிகரெட்டிற்கு லைட்டர் மூலம் தீயைப் பற்றவைக்கும் படம் உலக பிரசித்தம். அதேபோல் வின்சன்ட் சர்ச்சில் சுருட்டு புகைக்கும் காட்சி. சத்யஜித் ராய், ரித்விக் கட்டாக் எனப் பல இயக்குநர்கள் புகைப்படங்களின் மூலம் சிகரெட் காட்சியை வலிமையாக மக்களின் மனங்களில் பதிய வைத்திருந்தனர். மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் பீடி இழுக்கும் காட்சி கூட உயர்ந்த ரசனையாகவே இலக்கிய வட்டாரம் கருதி வந்துள்ளது.
அனைத்தின் மீதும் கல்லெறிந்தார் அன்புமணி ராமதாஸ். "படைப்புச் சுதந்திரம் என்று கூறி சிறு பிள்ளைகளைக் கொல்லக்கூடாது. சினிமா ஊடகத்தில் தடை கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று முரண்டு பிடித்தார்.
2004 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தடை அமலுக்கு வரும் என்றார். அக்டோபர் 9 ஆவது பிறந்தநாளுக்கு அது ஒரு சிறந்த பரிசாக அமையும் என்று அவர் நம்பினார். இவரது உத்தரவுக்கு மாறாக இயக்குநர் மகேஷ் பட் நீதிமன்றம் போனார்.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை திரைத்துறையினர் சந்தித்துப் பேசினர். மகேஷ் பட், "இந்த முயற்சியே மடத்தனம்" என்றார். ஊடகங்கள் கிட்டத்தட்ட இதை ஒரு 'ஃபத்வா' என வர்ணித்தன. உலக வரலாற்றில் இத்தடையை நடைமுறை செய்த முதல் நாடு இந்தியா என்ற பெருமிதத்தைச் சம்பாதிக்க அன்புமணி திட்டமிட்டார்.
ரஜினியை முடக்கவே இத்திட்டம் என்றும் சிலர் வாதிட்டனர். "ரஜினியை மனதில் கொண்டு இதைக் கொண்டுவரவில்லை" எனத் திட்டவட்டமாகக் கூறினார் அன்புமணி. 2005, மே 31 சினிmaaவில் சிகரெட் பிடிக்கும் காட்சிக்குத் தடை என அறிவித்தது மத்திய சுகாதாரத்துறை. ஜூன் 5, தகவல் ஒளிபரப்புத்துறை அதைத் திரும்பப் பெறக் கோரியது. ஜூன் 6, ஒட்டுமொத்த தடைச் சட்டத்தால் சிக்கல் உள்ளதாகத் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறியது. செப்டம்பர் 26, மகேஷ் பட் நீதிமன்றம் சென்றார்.
இதனால் இந்தியா முழுதும் கொறிப்பதற்கான தீனியாக மாறினார் அன்புமணி. இந்தப் புகழ் மூலம் அவர் 2016 தேர்தலில் களம் கண்டார். ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தினார். ஊடகங்கள் முழுக்க 'மஞ்சள்' நிறத்தில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' எனப் பக்கம் பக்கமாக விளம்பரங்களால் நிறைந்தன. அதுவரை 11 தேர்தல்களை பாமக சந்தித்திருந்து. அதிமுக, திமுக என இருகட்சிகள் மீதே சவாரி செய்து பழகியிருந்தது. அதை உடைத்தார் அன்புமணி.
புதிய பாணி காப்பரேட் பிரச்சாரம்
பிரம்மாண்ட விளம்பரங்கள் அவரைக் காப்பாற்றவில்லை. "சென்னையில் 20 ஆண்டுகள் முன் 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள் ஓடின. அதில் 20 லட்சம் பயணிகள் பயணித்தனர். 2016இல் 3500 பேருந்துகள் ஓடுகின்றன. அவற்றை 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். தேவை 8 ஆயிரம் பேருந்துகள். நாம் எங்கே முன்னேறி இருக்கிறோம்" என்று ஹைடெக் பிரச்சாரம் மூலம் அவர் எடுத்து வைத்த வாதம் எடுபடவே இல்லை.
பென்னாகரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 76,848 வாக்குகளை வாங்கி வெற்றியை உறுதி செய்த நிலையில், முதல்வர் வேட்பாளரான அன்புமணி அவரது சாதிய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியிலேயே 58,402 வாக்குகளை வாங்கி தோல்வியைத் தழுவினார்.
"பணபலத்தால் நாங்கள் தோற்றோம். தேர்தலே வேண்டாம். ஒவ்வொரு தொகுதியையும் ஏலம் விட்டுவிடலாம். யார் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களே சட்டமன்ற உறுப்பினர் என அறிவித்துவிடலாம்" என்று வேதனையோடு சொன்னார் அன்புமணி.
ஒருவிதத்தில் இவரது முயற்சி பாமகவுக்கு சில பலனை நல்கி இருந்தது. அதிமுக, திமுகவுக்கு அடுத்து மூன்றாவது கட்சியாக பாமக உருவெடுத்து இருந்தது. தனது அரசியல் எதிரியான விஜயகாந்த்தைவிட முன்னேறினார் அன்புமணி. அந்த உயரம் அக்கட்சிக்கு எந்த மாற்றத்தையும் தமிழக அரசியலில் உண்டாக்கவே இல்லை.
எழுதியவர்: கடற்கரய்












Click it and Unblock the Notifications