கேரள நெய் சோறு முதல் ஆற்காடு மக்கன் பேடா வரை.. திமுக பொதுக்குழுவில் மெகா விருந்து.. மெனுவை பாருங்க
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டம் இன்று தனியார் பள்ளியில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், திமுக நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே சுமார் 5,000 பேர் வரை இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்கான உணவு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வேட்புமனு
இந்த பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவிக்கும், துரைமுருகன் பொதுச் செயலாளர், டி.ஆர்.பாலு பொருளாளர் பொறுப்புக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே கட்சியின் தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார். அதேபோல துரைமுருகன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் முறையே பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வாக உள்ளனர்.

தலைவர்
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும். இக்கூட்டம் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளியின் 'விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்' காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர்களை அறிவிப்பார். இந்த பொதுக்குழுவில் கனிமொழி எம்பி துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு
இது மட்டுமல்லாது, இக்கூட்டத்தில் 4 தணிக்கைக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்காமல் தனியார் பள்ளியில் நடைபெறும் நிலையில், கூட்டத்தின் அரங்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல சைவம், அசைவம் உணவுக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆற்காடு மக்கன் பேடா
பொதுவாக திமுக கூட்டம் என்றாலே உணவு தனி கவனிப்பாகதான் இருக்கும். அதில் எந்த குறையும் இருக்காது. சில சமயங்களில் உணவு பற்றாக்குறைதான் ஏற்படுமே தவிர அவை மீதி இருக்காது. அந்த வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கும் சிறப்பான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் பாபு கேட்ரிங் சர்வீஸ்தான் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு உணவை தயாரித்து விநியோகிக்கிறது. அதில், ஆற்காடு மக்கன் பேடா, மட்டன் பிரியாணி, முட்டை, கத்தரிக்காய் பச்சடி, தயிர் பச்சடி, ரசம் பாத், உருளை வறுவல், பகளாபாத் ஆரஞ்சு ஐஸ்கிரீம், கல்கத்தா ஸ்வீட் பீடா வாழைப்பழம், வாட்டர் பாட்டில் என பட்டியல் நீண்டுள்ளது.

கேரளா நெய் சோறு
மேலும் இனிப்பு வகைகளில் ஸ்பெஷல் திருவையாறு அசோகா அல்வா, கேரளா பாலடை பிரதமன். சைடிஷ்களில் ஆனியன் மசால் வடை, ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ், வெள்ளரி கேரட், மாதுளம் தயிர் பச்சடி, உருளை பட்டாணி காரகறி ஆகியவை பரிமாறப்படுகின்றன. மேலும், சப்பாத்தி, விருதுநகர் காய்ன் பரோட்டா, நவரத்தின வெஜ்டபிள் குருமா, கடலகறி வெஜ்டபிள் சால்னா, பலாகாய் பிரியாணி, சின்ன வெங்காயம் அரைத்துவிட்டு உள்ளிதீயல் சாதம், கேரளா நெய் சோறு, லெமன் சாதம், தூதுவளை ரசம் சாதம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications