“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்!
சென்னை: "சில இடங்களில் வேண்டுமென்றே ஃபியூஸை எடுத்துச் செல்கின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது" என இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். மின் வெட்டு பிரச்சனை, தவெக அரசுக்கு தலைவலியாக உள்ளது.

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்த வேண்டி உள்ளது. மின்துறையில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும். இதுமாதிரி பதவி உயர்வு 45 வருடங்களில் நடந்தது இல்லை.
நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வை வழங்கி இருக்கிறது தவெக அரசு. மின்வெட்டு பிரச்சனைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வேண்டுமென்றே ஃபியூஸை எடுத்துச் செல்கின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது.
அமைச்சராகி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. இது மக்களுக்கான அரசு. மின்துறையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொஞ்சநாள் விட்டிருந்தால் மின் துறை தனியார் மயமாகி இருக்கும். மிக சவாலான துறை இது. பதவியேற்கும்போது ரூ.1.5 லட்சம் கோடி மின் துறை கடன் என நினைத்தேன். ஆனால் ரூ.2.5 லட்சம் கோடியாக கடன் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications