வலுவிழந்த 'கஜா' மீண்டும் புயலாக மாறுகிறது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: கஜா புயல் வலுவிழந்த நிலையில் மீண்டும் புயலாக மாறி மேற்கு திசையில் நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான கஜா புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை, வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் திண்டுக்கல் வழியாக நேற்று மாலை கேரளாவிற்கு தரை வழியே பயணித்தது.
தரைவழியாக சென்றபோது அது வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக மாறியது. கேரளாவிலிருந்து கஜா அரபிக் கடலை அடைந்துள்ளது.

நகர்ந்து சென்றது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகப் பகுதிகளை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த கஜா, தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து சென்றது.

லட்சத் தீவுகள் அருகே
கேரள பகுதிகளைத் தாண்டி தற்போது தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவுகளை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.

புயலாகும்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனால் அரபிக் கடலில் 20ம் தேதிவரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வலு கூடுகிறது
வங்கக் கடலில் முதலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்துதான், புயலாக கஜா வலுப்பெற்றது. இப்போது கடலுக்கு சென்றதும், மீண்டும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து புயலாக அதன் வலு கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications