விநாயகர் சதுர்த்தி: போயஸ்கார்டன் ஜெய விநாயகர் கோவிலில் பாலபிஷேகம் செய்த சசிகலா
போயஸ்கார்டனில் உள்ள ஜெய விநாயகர் கோவிலுக்கு வந்த சசிகலா அங்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ்கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு முன்பு உள்ள ஜெய விநாயகர் கோவிலுக்கு வந்த சசிகலா அங்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.
ஜெயலிதாவிற்கு விநாயகர் என்றால் மிகவும் இஷ்டம். போர்டிகோவில் இருக்கும் சுவற்றில் கிரானைட் கல்லில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா வீட்டில் இருந்து வாசலை காரில் தாண்டும்போது, தன் முகத்தைத் திருப்பி... காரில் இருந்தபடியே விநாயகரை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.

ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் சிறிய விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. ஜெய விநாயகர்' எனப் பெயரிடப்பட்ட இந்த விநாயகர் ஆலயம், ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம். ஜெயலலிதா இருந்த வரை ஜெயலலிதா வீட்டில் பூக்கும் பூக்களைக் கொண்டுதான் ஜெயவிநாயகருக்கு அலங்காரம் நடைபெறும். எல்லாமே ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைதான் 2016ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சசிகலாவிற்கு வேதா நிலையம்தான் இருப்பிடம் என்றானது. ஜெயலலிதா மறைந்த பிறகும் தனியாக வேதா நிலையத்தில் வாழ்ந்து வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் வந்து சந்தித்து சென்றனர். சசிகலா சிறைக்குப் போன பிறகு போயஸ்கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடமையாக்கப்பட்டு விட்டது.
பெங்களூரு சிறையில் இருந்த வந்த பின்னர் சில வாரங்கள் கழித்து போயஸ்கார்டன் வந்திருந்த சசிகலா நீண்ட நேரம் ஜெய விநாயகரை வழிபட்டார். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் போயஸ்கார்டன் வந்த சசிகலா, ஜெய விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார்.
அதே போல ஜெயலலிதாவும் சசிகலாவும் அதிகம் சென்று வழிபட்ட கோவில் கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில். ஜெயலலிதா, தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் எல்லாம் இங்கே வந்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக தேர்தல் நேரங்களில் வேட்பு மனுக்களை இங்கே வைத்து அர்ச்சனை செய்த பின்னர்தான் தாக்கல் செய்வார். பிறந்த நாளன்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்வார்.
வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள் நிகழும் போது ஜெயலலிதா செல்வது வரசக்தி விநாயகரைத் தரிசிக்கத்தான். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான தெய்வமாக இருந்தவர் வரசித்தி விநாயகர். ஜெயலலிதாவும், சசிகலாவும் பலமுறை கோட்டூர்புரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு வந்திருக்கின்றனர். ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவுக்கும் இந்த விநாயகர்தான் விருப்பக்கடவுள்.
போயஸ் கார்டன் ஜெய விநாயகரை அபிஷேகம் செய்து வணங்கிய சசிகலா தனது அரசியல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தை விரைவில் போயஸ்கார்டனில் இருந்தே தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications