சமையல் கேஸ் சிலிண்டர்.. வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் வருகிறதா.. ஒரே நாள்தான்.. ஒரே எதிர்பார்ப்பு
சென்னை: இந்த நவம்பர் மாதத்தில், சமையல் சிலிண்டரின் விலை, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நாளைய தினம் கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் டீசல்: இதில், பெட்ரோல், டீசல் விலைமட்டும் தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.. கேஸ் விலையோ, மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இஸ்ரேல் விவகாரம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் சிலிண்டரின் விலையும் உயர்ந்தபடியே உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியிலும் கவலையிலும் உள்ளனர்.
கடந்த செப்டம்பரில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. அதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கேஸ் விலை: அதுபோலவே, இந்த நவம்பர் 1ம் தேதி, கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. செப்டம்பரில் நிலவிய, அதே 918.50 ரூபாய்தான், நவம்பரிலும் தொடர்ந்தது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விலை செய்யப்பட்டது. அதேபோல, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படாமல், அதே 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வணிக சிலிண்டர் விலை ஓரளவு குறைந்தது..
நாளை என்னாகும்: இந்நிலையில், நாளை டிசம்பர் மாதம் துவங்க போகிறது.. எனவே, மாத தொடக்கமான நாளை, சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், வீட்டு சிலிண்டரில் மாற்றம் இருக்க போவதில்லை என்றும், வணிக சிலிண்டர் விலை மாற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இன்னும் சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்..
மானியம்: 5 மாநில தேர்தல் தற்போது நடைபெறுவதால், இதற்கான மானியம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.. அதுபோலவே, பொதுத்தேர்தலையொட்டி, மானியம் உயர்த்தும் யோசனை அரசுக்கு உள்ளதாக சொல்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications