12 தொகுதிகள்.. அதிமுக, பாஜகவிடம் டிமாண்ட் வைக்கும் ஜிகே வாசன்.. தமாகா போடும் கணக்கு என்ன?
சென்னை: என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் 12 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தமாகா இன்னும் பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே இருப்பதால், அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர வேண்டும் என்ற நோக்கில் 12 தொகுதிகளை பெற காய் நகர்த்தி வருகிறது. அதேபோல் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமாகா தலைவர் ஜிகே வாசன் கூட்டணியை உறுதி செய்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்றும் அறிவித்தார்.

அதேபோல் கூட்டணியின் தலைமை என்ற வகையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே நவம்பர் மாதம் ஒருமுறை எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்திருந்தார். அப்போது தமாகா தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தார். அப்போது இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமாகா தலைவர் ஜிகே வாசன் அதிமுகவிடம் 12 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் 15 தொகுதிகளை தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடமும் ஜிகே வாசன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கேட்பதற்கு பின்னணியில் பல்வேறு கணக்குகள் இருந்து வருகிறது. தமாகா கட்சி இதுவரை பதிவு செய்யப்பட்டக் கட்சியாகவே இருந்து வருகிறது. அதனால் தமாகா அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்வதற்கே இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றால், தமாகாவால் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற முடியும் என்று நம்புகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications