ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்.. ரேசன் ஊழியர்களுக்கு திடீர்னு போன உத்தரவு.. அப்பாடா, இனிமேல் நிம்மதி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு முன்னெடுத்து வரும்நிலையில், இன்னொரு முக்கிய உத்தரவை ரேஷன் ஊழியர்களுக்கு பிறப்பித்திருக்கிறதாம். இந்த தகவலானது, குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது.
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன், கட்டுப்பாடற்ற பொருட்களான உப்பு, டீ துாள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள், பெருங்காயம், என 30க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

மளிகை பொருட்கள்: இந்த கட்டுப்பாடற்ற கூடுதல் மளிகை பொருட்களை வாங்கவேண்டுமென பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில இடங்களில, ரேஷன் கடைகளுக்கு அதிகளவிலான கூடுதல் மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதால், அவைகளை முழுவதுமாக விற்க முடியாமல் போகிறது. பொதுமக்களும் அவைகளை வாங்க மறுக்கிறார்களாம்.
தீபாவளி: அதேபோல, தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டதில், சில கடைகளில் அவை விற்றது போக, மீதி கையிருப்பில் உள்ளன. ஆனால், அந்த பொருட்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதாம்..
இதனால், ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம் மளிகையை, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்பதாகவும், இதன்காரணமாக பல இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் வெடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ரேஷன் விற்பனை: மளிகை பொருட்களுக்கான மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நேரிடுவதுடன், விற்பனையாகாத பொருட்களுக்கு சொந்த பணத்தை செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது. எனவே, ரேஷன் கடைகளுக்கு அனுப்பபடும் மளிகைப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கைகளை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கார்டுதாரர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியிருக்கிறது.
மளிகை பொருட்கள்: இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ரேஷனில் வழங்கப்படும் மளிகை பொருட்களை வாங்குவதும், வாங்காததும் அட்டைதாரர்களின் விருப்பமாகும்.. எனவே, தீபாவளிக்கு அனுப்பப்பட்ட சிறப்பு மளிகை தொகுப்புகளில் விற்பனையாகாமல் உள்ளதை திருப்பியனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு வருவோரிடம் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications