குறைந்த விலைக்கு தங்கம்! நம்பி ஏமாந்த 200 பேர்.. சென்னை அசோக் நகரில் 20 கோடி மோசடியின் முழு பின்னணி
சென்னை: சென்னை தியாகராயநகரில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து ஒரு கிலோ தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்த துணிகரச் சம்பவம் நடந்து, அதன் பரபரப்பு இன்னும் மக்கள் மத்தியில் அடங்குவதற்குள், அதைவிடப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அடுத்த ஒரு மெகா தங்க நாணயம் மோசடிச் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இந்த முறை குற்றச்சாட்டு சாதாரண நபர்கள் மீது அல்லாமல், சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்துள்ள ஒரு உயர் காவல்துறை அதிகாரி மீதே பாய்ந்திருப்பது ஒட்டுமொத்த போலீஸ் துறையையுமே நிலைகுலையச் செய்துள்ளது. அப்ப என்ன நடந்தது?
சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் தனியார் நிறுவன ஊழியர் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு கிலோ எடையுள்ள பழமையான தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துத் தப்பி விட்டனர்.

100 சவரன் தங்க நகைகள்
இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதி சிசிடிவியை தீவிரமாக ஆய்வு செய்ததில், ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் (50) என்பவரே இந்த திருட்டையும் செய்தது கண்டறியப்பட்டது..
அதுமட்டுமல்ல, இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பிரபாகரனின் மனைவி சுமதிக்கும் (47) இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்து போலீசார் அதிர்ந்தனர்.. திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தில் சுமதியை கைது செய்த போலீசார், சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.
சுமதியின் பெரிய ரோல்
இதில் சுமதியின் ரோல் என்ன தெரியுமா? கணவன் கொள்ளையடித்துவிட்டு அந்த நகைகளை சுமதியிடம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடுவாராம்.. உடனே சுமதி, தன் கணவரை வக்கீல் வைத்து ஜாமீனில் எடுப்பாராம்.. இந்த தம்பதிக்கு இதுவே வழக்கமாக இருந்துள்ளது.. இப்போது மீதமுள்ள நகைகளுடன் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தின் பரபரப்பு ஓயும் முன்பே, சென்னை மாநகர போலீசில் ராயபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் ஷீலாமேரி என்பவர், சுமார் 20 கோடி ரூபாய் வரை மெகா மோசடி செய்துள்ள அடுத்த அதிரடிப் புகார் வெடித்துள்ளது.
இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி - தங்கக் காசு
கடந்த 2023 ம் ஆண்டில், சென்னை திருவொற்றியூர் மகளிர் இன்ஸ்பெக்டராக ஷீலாமேரி பணிபுரிந்து வந்தார்.. அப்போது சுங்கத்துறையினரால் பல்வேறு சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்படும் அசல் தங்கக்காசுகள் மற்றும் தங்கக் கட்டிகளை, தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக பலரிடம் ஆசைவார்த்தை சொல்லியுள்ளார் ஷீலாமேரி.
ஒரு பொறுப்பான அரசு உயரதிகாரியின் வார்த்தைகளை அப்படியே நம்பிய சக காவல்துறை ஊழியர்களும் பொதுமக்களும், தங்களின் வாழ்நாள் சேமிப்புப் பணத்தை அவரிடம் நம்பி கொடுத்துள்ளனர்.
இதை தவிர, தீபாவளி சேமிப்புச் சீட்டுத் திட்டம் என்ற பெயரிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பல தரப்பிலிருந்தும் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளார் ஷீலா மேரி..
தங்கம் நாணயம் மோசடி
ஆரம்பத்தில் சிலருக்கு லாபம் தருவது போலக் காட்டி நம்பிக்கையை ஏற்படுத்திய அவர், இறுதியில் சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு, சொன்னபடி தங்கக்காசுகளையோ அல்லது பணத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றி இழுத்தடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட போலீசாரும், பொதுமக்களும் பலமுறை கேட்டும் முறையான பதில் கிடைக்காததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக போலீசார், சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு (போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.
சக அதிகாரி மீதே கொடுக்கப்பட்ட இந்த அடுக்கடுக்கான புகார்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினர்.
மூளையாக செயல்பட்ட ஷீலா மேரி
அப்போதுதான், ஷீலாமேரியின் கணவருக்கு டிரைவராக பணிபுரிந்து வந்த பிரபுமணி என்பவர் உடந்தையாக செயல்பட்டது உறுதியானது. பணப் பரிவர்த்தனைகள் கவனித்து கொள்வது, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேசி பணத்தை வாங்குவது போன்ற வேலைகளை பார்த்ததுமே இந்த பிரபுமணி தானாம்.. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
அனைத்துக்கும் மூளையாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதிகாரியே, சக போலீசாரையும் பொதுமக்களையும் கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ள இந்தச் சம்பவம், சென்னை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications