தங்க நகை கடன் விதிமுறைகளை கவனித்தீர்களா? ரிசர்வ் வங்கி சொன்ன அந்த ஒரு சூப்பர் விஷயம்
சென்னை: இந்தியாவில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான தங்கம் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது என்பது முக்கியமானதாக இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட விதிமுறையும், இப்போது அண்மையில் கொண்டு வந்த ரசீது விதிமுறையும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நிறுத்திவைத்தது. புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் விஷயம் உள்ளது.
தங்கத்தின் விலை 72 ஆயிரம், 73 ஆயிரம் என மாறி மாறி தற்போது விற்கிறது. செய்கூலி, சோதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 22 கேரட் தங்க நகை ஒரு பவுன் 80 ஆயிரம் என்கிற அளவில் கடைகளில் விற்கப்படுகிறது. வெறும் 4 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இருமடங்கு ஆகி உள்ளது. அதேபோல் வெறும் ஓராண்டில் தங்கம் விலை 20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

நகைகள் விற்பனை
நகை விலை உச்சத்திற்கு சென்றாலும், அதன் விற்பனை குறையவே இல்லை. நகையின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என்று நம்புவதால், எதிர்கால சேமிப்புக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். அதேநேரம் நகையை வாங்கும் மக்கள், அதனை வங்கியில் அடகு வைத்துவிட்டு மீண்டும் அந்த பணம் மூலம் நகை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி நகை வாங்கிய பலருக்கு பெரிய லாபமும் கிடைத்துள்ளது.
முழு பணம் கட்ட வேண்டும்
அதேபோல் அவசரத்திற்கு கடன் பெற தங்கம் அருமருந்தாக உள்ளது. ஆனால் தங்கத்தை வைத்து கடன் பெறுவதில் ரிசர்வ வங்கி நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், வட்டி, அசலை முழுமையாக கட்டிய பின்னரே திருப்ப முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவிததது. இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
பில் வேண்டும் என்ற விதிமுறை
அதேபோல் புதிய வரைவு அறிக்கை கடந்த மாதம் ரிசர்வ் வெளியிடப்பட்டது. அதில் தங்க நகை மதிப்பில் 75 சதவீதம் தான் கடன் வழங்க வேண்டும் என்றும் நகை உரிமைக்கான ஆதாரத்தை (பில்) வழங்க வேண்டும். அதாவது நகை வாங்கிய பில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு
அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல கட்சிகள் குரல் எழுப்பின. இந்த சூழ்நிலையில், ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்றும், நகை கடன் விதிமுறைகளை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தாமல் அடுத்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது.
85 சதவீதம் கடன்
இதனை ஏற்று ரிசர்வ வங்கி தங்க நகைக்கடனுகான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் பெறலாம். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதமும் பொதுமக்கள் இனி கடன் பெறலாம்.
கடன் வழங்க கிரெடிட் மதிப்பு
அதே போல் நகை உரிமைக்கான ஆவணத்தை கேட்க வேண்டும் என்ற நிபந்தனை இனி கிடையாது. அதே போல ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உட்பட்ட கடன் வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு உரிய கிரெடிட் மதிப்பீடு செய்யப்படும் என்றும், அதேநேரம் ஒரே நபர் அதிக நகைகடன்களை திரும்ப, திரும்ப வாங்குவது பணபரிமாற்ற விதியின் கீழ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
நகை ஏலம் விதி என்ன
இதேபோல் மீட்கப்படாத நகைகளை ஏலம் விடுவது ஆரம்ப விலை நகையின் மதிப்பில் குறைந்தபட்சம் 90 சதவீதம் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறையில் மாற்றி உள்ளது.. 90 சதவீதத்திற்கு கீழான மதிப்பில் நகைகளை ஏலம் விடக்ககூடாது என்றும், இந்த விதிமுறை எதற்கு என்றால் ஒருவர் நகையை வைத்து மீட்க முடியாமல் போய், அதனை ஏலத்திற்கு விட்டு, அவரின் கடனை முழுமையாக அடைப்பதற்கும், மீதி இருந்தால் உரிமையாளருக்கு அதனை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டு இறுதியில் வட்டியை மட்டும் கட்டலாம்
அதேபோல் பலரும் எதிர்ப்பார்த்த நல்ல விஷயத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நகை கடன் புதுப்பித்துக்கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடையும், புதிய அறிவிப்பில் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மாதம் கழித்து நகை கடன் புதுப்பிக்கப்படாது. அதன் முழு தொகையை கட்டிவிட்டு நகையை மீட்க வேண்டும். பின்னர் மறுநாள் தான் மீண்டும் நகைக்கடன் பெறமுடியம் என்ற இந்த விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வழக்கம் போல் ஒரு ஆண்டுக்கு பிறகும் நகைகடனை வட்டியை கட்டியோ அல்லது கூடுதல் நகைகடன் பெற்றோ புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications