தங்கத்தை லபக்னு வாயில் போட்டு விழுங்கிய பெண்.. எக்ஸ்ரேவில் அந்த அதிசயம்.. பெரிய ட்விஸ்ட் பாருங்க
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், ஏழை எளிய மக்களால் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.. இன்னும் வரப்போகிற நாட்களில் தங்கம் விலை நிச்சயம் ஏறத்தான் செய்யுமாம்.. இதற்கு நடுவில் பாடுபட்டு சேமித்து வைத்திருக்கும் நகைகளை திருடுவதும், கொள்ளையடிப்பதும் என குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. இதோ நேற்று கேரளாவில் நடந்த சம்பவத்தை பாருங்கள்...!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண்.. அவருடைய 2 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது..

தங்கம் நகைகள்
அதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீலம்பூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் அங்கு டாக்டர் இல்லை..
டாக்டர் வருவதற்குத் தாமதமானதால், மருத்துவமனையின் வராண்டாவில் இளம் பெண் காத்து கொண்டிருந்தார்.. அங்கேயே அவரது குழந்தையும் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது யதேச்சையாக கவனித்தபோது, விளையாடி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகை மாயமாகி இருந்தது. இதனால் பதற்றமடைந்த அந்த தாய், மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தும் நகை கிடைக்கவில்லை.
தங்க நகை வாயில் விழுங்கி
அங்கிருந்த மற்ற நோயாளிகளிடமும் ஊழியர்களிடமும் விசாரித்தபோது, ஒரு பெண் அந்த குழந்தையை நீண்ட நேரமாக மிகவும் பாசத்துடன் கொஞ்சி கொண்டிருந்தது தெரியவந்தது.. உடனே அந்த பெண்ணை தேடிப்பிடித்து, நகை குறித்து கேட்டார் இளம்தாய்.. ஆனால், அந்தப் பெண் தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாக பதில் சொன்னார்.. அத்துடன் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசியிருக்கிறார்..
இது மருத்துவமனை வளாகத்தில் இருந்த அத்தனை பேருக்கும் சந்தேகத்தை தந்தது.. அதனால், இது குறித்து நீலம்பூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்திற்குரிய அந்த பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் கேட்டபோதுகூட அந்த பெண் எதற்கும் மசியவில்லை.
வயிற்றுக்குள் அதிசயம்
அதனால் போலீசார், அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர்.. அப்போதும் அந்த பெண் தனது பிடிவாதத்தை கைவிடவில்லை. தான் திருடவில்லை என்று தொடர்ந்து வாதிட்டார்.
ஆனாலும் போலீசாரின் அனுபவம் வாய்ந்த பார்வை, அவர் மீது இருந்து விலகவில்லை... ஒருவேளை நகையை எங்காவது மறைத்து வைத்திருக்கலாம் அல்லது விழுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் சிந்திக்கத் தொடங்கினர்...
காட்டித்தந்த எக்ஸ்ரே
இதற்காக அந்த பெண்ணை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஹெல்த் செக்கப் செய்ய முடிவு செய்தனர். அங்கு அப்பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. எக்ஸ்ரே முடிவுகள் வந்தபோது அங்கிருந்த போலீசார் மற்றும் டாக்டர்கள் என மொத்த பேரும ஆடிப்போய்விட்டார்கள்.. காரணம், காணாமல் போன அந்த மூன்றரை கிராம் தங்க நகை, அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருப்பது எக்ஸ்ரே மூலம் தெளிவாகத் தெரிந்தது.
இதற்கு பிறகு அந்த பெண்ணால் சமாளிக்க முடியவில்லை.. உண்மையை ஒப்புக் கொண்டார்..நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த சமீனா என்பது அவரது பெயராம்.. 35 வயதாகிறது..
கேரளா தில்லு முல்லு பெண்
கிளினிக்கில் குழந்தையைக் கொஞ்சுவது போல் நடித்து, நைசாக அதன் கழுத்தில் இருந்த நகையைத் திருடியதாகவும், கையில் பிடிபட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் நகையை தனது வாயில் போட்டு அப்படியே விழுங்கிவிட்டதாகவும், வயிற்றுக்குள் மறைத்து வைத்துவிட்டால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கணக்கு போட்டாராம்..
ஆனால், நவீன மருத்துவத் தொழில்நுட்பமான எக்ஸ்ரே மூலம் அவரது தில்லுமுல்லுவை அம்பலப்படுத்திவிட்டது.. இதையடுத்து சமீனாவை போலீசார் கைது செய்தனர்.
பெரிய ட்விஸ்ட்
இப்போது சிக்கல் என்னவென்றால், வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுக்க முடியவில்லையாம்.. இயற்கையைன முறையில் வெளியே எடுப்பதற்காக அவருக்கு 'இனிமா' கொடுக்கப்பட்டது. மருத்துவமனையிலேயே அவரை அனுமதித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால், பலமுறை முயற்சி செய்தும் நகை மட்டும் வெளியே வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளார்களாம்.. இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.. பொதுவாக இனிமா கொடுத்துப் பொருள்களை வெளியே எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், டாக்டர்கள் அதே முறையை தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறார்களாம்..!!!














Click it and Unblock the Notifications