"மாமனார்".. கொஞ்சம் வேலூரையும் கவனியுங்க.. பாஜக எம்எல்ஏ கிட்ட, திமுக அமைச்சர்கள் கோரிக்கை.. இது எப்போ
சென்னை: பாஜக எம்எல்ஏவிடம், 2 திமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்த சம்பவம் தமிழக சட்டப்பேரவையில் நடந்துள்ளது.. அத்துடன் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் பேரவையில் நடந்திருக்கிறது.. என்ன அது?
சபாநாயகர் அப்பாவு மீது, எப்போதுமே நிறைய மரியாதையை வைத்திருப்பவர் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. சட்டசபை நிகழ்வுகளின்போதெல்லாம், சபாநாயகர் அப்பாவு, வானதி இடையேயான உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும்..
இவர்களின் உரையாடலில், மூத்த தலைவர் துரைமுருகனும் இணைந்துவிட்டால், பேரவையே கலகலத்துவிடும்.. இப்படித்தான், முதல் முதலாக உதயநிதி ஸ்டாலின் அன்று உரையாற்றி கொண்டிருந்தார்..

கன்னி
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு "கன்னி" என்று குறிப்பிட்டிருந்தார் அப்பாவு.. உடனே, வானதி சீனிவாசன் எழுந்து, இளம் வயது பெண்ணைக் குறிக்கும் வார்த்தைதான் "கன்னி".. என்னைப் பொருத்தவரை 'அறிமுகப்பேச்சு' எனக் குறிப்பிட்டால் அது நாகரிகமாக இருக்குமே" என்றார். வானதியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வானதியின் பேச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.. அதற்கு வானதி, "சபாநாயகரே.. நீங்களும் நானும் எத்தனையோ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விவாதித்துள்ளோமே" என்றார்.

சித்ரகுப்தன்
அதற்கு சபாநாயகர், "ஆமாம்.. ஆமாம்.. என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. நிச்சயமாக, உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை முறைப்படி சட்டப்பேரவையில் கொடுக்கப்படும்" என்றதுமே, சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.. அதேபோல, இன்னொருநாள் சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில்துறை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது.. இந்த விவாதத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பேச எழுந்தார்.. இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, உங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசிவருகிறீர்களே" என்றார்.

குபீர் குபீர்
இதை கேட்ட வானதி சீனிவாசன், "சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும், அவரவர் பேசும் நேரத்தை அவரவர் கணக்கில் வைக்க வேண்டும்... அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்த நேரத்தை எல்லாம், என்னுடைய கணக்கில் சேர்க்க கூடாது, என் கணக்கு தனி" என்றார்.. வானதி இப்படி சொன்னதுமே பேரவையில் சிரிப்பலை குபீர் என எழுந்தது.. இதுபோல் பலமுறை சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ள நிலையில், நேற்றைய தினம், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மீண்டும் ஒரு சுவாரஸ்யம் நடந்துள்ளது..

சிரிப்பலை
வானதி சீனிவாசன்:- பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த திட்டத்தை தொடங்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் வேகமாக வளரும் நகரங்களில் கோவை முதலிடம் வகிக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணி மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 85 சதவீத அளவுக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதி பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்க, உங்களது கட்சிதான் (பாஜக.) மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே நீங்களும் வலியுறுத்துங்கள்.
சபாநாயகர் அப்பாவு:- மதுரை எய்ம்ஸ் மாதிரி பணிகள் வேகமாக நடக்கிறதா? (சபாநாயகரின் இந்த கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.)
அவை முன்னவர் துரைமுருகன்:- எல்லோரும் கோவை, மதுரையை பற்றித்தான் பேசறீங்க.. வேலூரையும் கொஞ்சம் கவனியுங்கள்.
வானதி சீனிவாசன்:- அது என்னுடைய மாமனார் ஊர். அங்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைய உள்ளது.
சபாநாயகர் அப்பாவு:- மாமனார் ஊர் என்றால், அது இப்போது உங்கள் ஊர்தானே? (இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.)
வானதி சீனிவாசன்:- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு கோவையில் நடத்த வேண்டும். கோவையில் சாலைகள் மோசமா இருக்கு..
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:- கோவை மாநகராட்சி சாலை பணிகளுக்கு ரூ.200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, ரூ.90 கோடியில் பணிகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அங்கு பாதாள சாக்கடை பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல் 114 கிலோ மீட்டர் மண் சாலை, தார் சாலையாக மாற்றப்பட இருக்கிறது.
வானதி சீனிவாசன்:- எப்பவுமே இதேமாதிரியான பதில்தான் வருகிறது. எங்களுடைய காதுகளும் பாவம் இல்லையா?
அமைச்சர் செந்தில் பாலாஜி:- நாளை (இன்று) கூட கோவை மாநகராட்சியில் ரூ.14 கோடி மதிப்பில் சாலை பணிகள் தொடங்க இருக்கின்றன.
வானதி சீனிவாசன்:- உரிமைத்தொகை ரூ.1,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்களிடம் இனி ஆதார் கார்டு எண்ணை கேட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். அதிக முறை மது வாங்கி குடிப்பவர்களின் வீட்டு பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:- தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தில்தான் இயங்குகிறது என்று கூறுவது தவறு. கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், பாஜக ஆளும் கர்நாடகத்தில் மதுக்கடைகள் திறந்திருந்தன. 2006-2011-ம் ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்தான் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் அதிகரித்தது. குடிப்பவர்கள் உயர்ந்ததால் இது அதிகரிக்கவில்லை. மது விலை உயர்த்தப்பட்டதால் வருமானம் அதிகரித்தது.
வானதி சீனிவாசன்:- பஞ்சமி நிலத்தை மீட்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
அமைச்சர் எ.வ.வேலு:- பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து உறுப்பினர் இங்கே பேசினார். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நாம் மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் வாங்குகிறோம். நமக்கும் ரேஷன் கார்டு உள்ளது. அதனால் நமது வீட்டு பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க முடியாது. எனவே, தகுதியை நிர்ணயித்து அதன்கீழ் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்... இவ்வாறு நேற்றைய தினம் பேரைவையில் விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications