தாம்பரம் வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. குரோம்பேட்டையில் 75 இடங்களில் போலீஸ் செய்த சூப்பர் சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் 5 இடங்களில் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கேமராக்கள் அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு அறையை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்துள்ளார். ஜி எஸ் டி சாலை, சி எல் சி சாலை உள்ளிட்ட சாலைகளில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 75 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
சென்னை குரோம்பேட்டை பகுதி, திநகர் புரசைவாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வணிகபகுதியாக உருவெடுத்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டை இன்று சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக மாறி உள்ளது. திருச்சி-சென்னையை இணைக்கும் ஜிஎஸ்டி சாலை குரோம்பேட்டை வழியாக செல்கிறது. சென்னையில் திநகர், வேளச்சேரிக்கு அடுத்தபடியாக ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.

இதனால் இந்த இரு இடங்களுமே சென்னையின் மிகப்பெரிய வணிக மையமாக உருவெடுத்துள்ளன. அந்த வகையில் குரோம்பேட்டை பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. மேலும் சென்னையின் ஒஎம்ஆர் சாலை, குன்றத்தூர், ஈசிஆர் சாலை, தாம்பரம், விமானநிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இடமாக குரோம்பேட்டை இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக குரோம்பேட்டை இருக்கிறது
இந்த சூழலில் குரோம்பேட்டையில் குற்றங்கள் நிகழ்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தாம்பரம் போலீசார் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், குரோம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஜி எஸ் டி சாலை, சி எல் சி சாலை உள்ளிட்ட சாலைகளில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 75 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதில் வாகனங்களின் பதிவு எண், அங்கீகாரம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ஜி எஸ் டி, சாலையில் காசநோய், மாநகராட்சி மண்டல அலுவலகம், வைஷ்ணவா ரெயில்வே கேட் சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் ஏ என் பி ஆர் என்ற அதிநவீன கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர். இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லிமாக படம் பிடிக்கும். எனவே குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது இனி எளிதாகும். இந்த 75 கேமராக்களையும் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்தபடியே கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள 2 மானிட்டர்கள் மூலம் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீசார் கண்காணிக்கலாம்.
இந்த கண்காணிப்பு அறையை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார். மேலும் 75 கேமராக்களின் செயல்பாட்டை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன், குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications