புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
சென்னை: கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் சொன்னபடி, புதிய வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காமல் தாமதம் செய்தால், அவர்கள் மீது வாரன்ட் பிறப்பித்து, இழப்பீடு, அபராதத்தை வசூலிப்பதற்கு, புதிய வழிமுறையை, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
வீடு கட்ட ஆசைப்படும் பல நடுத்தர வர்க்கத்தினர், ஆசையுடன் கட்டுமான நிறுவனங்களை அணுகுகிறார்கள். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் சொன்னபடி கட்டிடங்களை கட்டியும் தருவது இல்லை.. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளை வழங்குவதும் இல்லை.. ஆனால் பணத்தை மட்டும் வீடு வழங்குவதற்காக கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்தால், அது குறித்து பொது மக்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கும் வசதி இருக்கிறது. இந்த புகார்களை விசாரிக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறது.
ஆனால் இந்த உத்தரவை கட்டுமான நிறுவனங்கள் அலட்சியப்படுத்தும் நிலை இருப்பதாக புகார் உள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிடும் நிலை இருக்கிறது. அதை விசாரிக்கும் ஆணையம், புகாருக்கு உள்ளானகட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதற்காக பல வழக்குகளில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதில் சில சமயங்களில் மாவட்ட நிர்வாகங்கள் சுனக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், உரிய காலத்தில் வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடும் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது..
இந்த விவகாரம் குறித்து அண்மையில் மத்திய வீட்டுவசதி அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து 'அபராதம் அல்லது இழப்பீட்டை வசூலிக்கும் அதிகாரத்தை, மாவட்ட அளவிலான கூடுதல் மாஜிஸ்திரேட் அல்லது கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு அளிக்கலாம் என்றும் இவர்களை வருவாய் மீட்பு அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கலாம்' என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த நடைமுறை இருக்கிறது. இதேபோன்ற நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டால், வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்,..












Click it and Unblock the Notifications