அசத்துதே தமிழ்நாடு.. ரூ.4000 கோடி கூடுதல் வருவாய்.. ஜிஎஸ்டி நம்பர் ரத்து? எகிறியடித்த வணிகவரித்துறை
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துவரும் நிலையில், மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது வணிகவரித்துறை.. குறிப்பாக, வரி விதிப்பில் எளிய நடைமுறை, துறையில் நிர்வாக சீர்திருத்தங்களுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்னாளுமைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமாதான் திட்டம்: அதுமட்டுமல்லாமல், வணிகர்கள் பயன்பெறும் வகையில், சமாதான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த வாரியத்தின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்களான குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த 3 ஆண்டுகளில், இப்படி திறம்பட செயல்பட்டதால்தான், சமீபத்தில்கூட, வணிகவரித் துறையில் ஏறத்தாழ 47.19 சதவீதம் கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது.
அதிக வருவாய்: இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு மகிழ்ச்சி தகவலை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.. அதாவது, கடந்த வருடத்தைவிட, இந்த வருடம் இதுவரை ரூ. 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி மேலும் சொன்னதாவது:
தமிழகத்தில் வரி ஏய்ப்பினை தடுப்பதற்காக, பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இதில் முதலாவதாக, வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவா்களின் ஜிஎஸ்டி நம்பரை ரத்து செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அந்த ஜிஎஸ்டி நம்பரை முழுமையாக நீக்கும் பொறுப்பு, மத்திய அரசை சாா்ந்துள்ளது.
விதிமீறல்கள்: ஒருசிலா் தொழில் மேற்கொள்ளாமலேயே, இந்த நம்பரை வாங்கி வைத்திருக்கிறார்கள்.. இந்த விதிமீறலில் ஈடுபட்டுள்ளவா்களைக் கண்டறிய விரிவான கள ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த வருடம், தமிழக வணிக வரித் துறைக்கான வருவாய் இலக்கு ரூ. 1.42 லட்சம் கோடியாகவும், பதிவுத் துறைக்கான வருவாய் இலக்கு ரூ. 23 ஆயிரம் கோடியாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக வரித் துறையில் கடந்த ஆண்டைவிட, தற்போதைய ஆண்டில் இதுவரையிலான காலத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மக்களிடம் பெறும் ஜிஎஸ்டி வரியை வியாபாரிகள் அரசுக்கு முழுமையாக செலுத்த வேண்டும்... நியாயமாக தொழில் செய்பவா்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அரசு எப்போதுமே தயாராக உள்ளது" என்றாா்.
உதயநிதி ஸ்டாலின்: இதையடுத்து, அமைச்சா் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவாா் என்று தகவல்கள் பரவி வருகிறதே? என்று செய்தியாளா்கள் அமைச்சரிடம் கேட்டார்கள். அதற்கு அமைச்சர் மூர்த்தி, "விரைவில் எதிா்பாருங்கள்" என்று மட்டும் பதிலளித்தார். ஆனால், துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கப்படுவதாக பரவும் செய்தியை, அமைச்சர் மூர்த்தி மறுக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications