சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இனி ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை வராது! டீன் உறுதி
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை இனி வராது என்று மருத்துவமனை டீன் டாக்டர் தோணிராஜன் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது வரை 1914 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதாகவும், மேலும் 136 படுக்கைகள் இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதால் செய்யப்பட்டுள்ளதால் இனி ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், தூத்துக்குடி, மதுரை உள்பட 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் கொரோனா தொற்று மிக அதிகமாகவே இருக்கிறது தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் அரசு மருத்துவமனைகளான ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை, கிங்ஸ் இன்ஸ்டிடியூட், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸில் காத்திருப்பு
கொரோனா தொற்றின் முதல் அலையைப் போல் இல்லாமல், இரண்டாவது அலையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுகின்றது. தற்போதைய நிலையில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் முழுமையாக நிரம்பிவிட்டது. இதனால் பலர் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.

படுக்கைகள் அதிகரிப்பு
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம்புன்சில் நோயாளிகள் காத்திருக்கு நிலை ஏற்படக்கூடாது என்று கூறியதுடன், அதற்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜிரோ காத்திருப்பு நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

படுக்கைகள் அதிகரிப்பு
இதன்படி சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது மருத்துவமனைக்கு தொற்று பாதிக்கப்பட்டு சென்றால் அவர்களுக்கு என்ன மாதிரியான படுக்கைகள் தேவைப்படுகிறது என்பதை தயார் செய்து சீக்கிரமாகவே படுக்கைகள் தரப்படுகிறது.

ஆக்சிஜன் வசதி
இதுகுறித்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தோணிராஜன் கூறுகையில், ஒவ்வொரு வார்டிலும் யாரெல்லாம் ஆக்சிஜனிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ,அவர்களுக்கு தேவையான மற்றொரு படுக்கை உடனடியாக மருத்துவர்கள் தயார் செய்து, ஆக்சிஜன் படுக்கை வசதி அதிகரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் 1,914 இப்போது உள்ளது.

காத்திருக்க தேவையில்லை
இந்நிலையில் மேலும் 136 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது முடியும் நிலையில் உள்ளது. இனி மொத்தம் 2050 படுக்கைகளாக இருக்கும். மேலும் ஆக்சினேட்டரை முழுமையாக பயன்படுத்தி இரண்டு நாட்களில் 550 ஆக்சினேட்டர் முழுமையாக ஏற்படுத்தி இருக்கிறோம். இதனால் உடனுக்குடன் உள்நோயாளிகளை அனுமதிக்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சிகிச்சைக்கு வருபவர்கள் தாமதமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடர்கிறது. இதனால் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது" என்றார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஆகியோர் 136 ஆக்சிஜன் படுக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டுவந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications