அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷனில் இனி இந்த பொருளையும் ஈஸியாக வாங்கலாம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை தந்துள்ளது.. துவரம் பருப்பு குறித்த இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
நேற்றைய தினம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை.

நவம்பர் தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்ட நிலையில், பல நியாய விலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நியாய விலைக்கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவது சாத்தியமாகாத ஒன்றல்ல. அது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால், அதைக் கூட தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை.
தமிழக அரசு: வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாய விலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாய விலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ரேஷன் கடைகள்: இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு போதிய அளவு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், " தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration Card Holders) மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு விட்டர் பாமாயில் ரூ. 25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
நவம்பர் மாதம்: துவரம் பருப்பு விநியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மருத்துவர் இராமதாஸ் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விதியோகிக்கப்படவில்லை என்றும் துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் கூறியிருக்கிறார்.
நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளாது தேதி வரை 1,62,83.486 கிலோ வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (27,53,606 கிலோ) சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது.
நியாய விலை கடைகள்: அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது. சென்னை மண்டலங்களைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20,55,811 கிலோ துவரம் பருப்பில் 14,75,019 கிலோ வழங்கப்பட்டு நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (2,68,122 கிலோ) சேர்த்து 87% துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்குப் பொதுமக்களுக்கு விநியோகித்திட அனுப்பப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு: மேலும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த மூன்று மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் இன்று (22.11.2024) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆதலால், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications