நங்கநல்லூருக்கு நல்ல காலம்! ரூ.29.57 கோடி புதிய சுரங்கப்பாதை! 25 ஆண்டுக்குபின் சென்னைக்கு குட்நியூஸ்
சென்னை: நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.. போக்குவரத்து பிரச்சனையை கிட்டத்தட்ட 25 வருஷங்களாக எதிர்கொண்டு வந்த நிலையில், இப்போது நிம்மதி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசு இதற்கான அறிவிப்பை செய்யவும், அது மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அது என்ன?
ஜிஎஸ்டி சாலைக்கு போக வேண்டுமானால், பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை கடக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் நேரடி சாலை இல்லாததால், மக்கள் குறுகிய குடியிருப்பு தெருக்களில் திரும்பி திரும்பி செல்ல வேண்டியதாக உள்ளது..

நங்கநல்லூர் - பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.. பஸ், கார் என வண்டி சென்றாலும், அது சிக்கலாகவே அமைகிறது.. அத்துடன் டிராபிக், விபத்துகள் போன்றவையும் அடிக்கடி ஏற்பட்டு அம்மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன..
அதிலும் குறிப்பாக ரயில்கள் அடிக்கடி இயக்கப்படுவதால், லெவல் கிராஸிங் கேட் நீண்ட நேரம் மூடப்பட்டுவிடுகிறது.. இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள், வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என பலரும் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது.. எனவேதான், இதற்கெல்லாம் தீர்வாக நங்கநல்லூர் - பழவந்தாங்கல் சுரங்கப்பாதை வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்..
சுரங்கப்பாதைக்கு நேரடி இணைப்பு சாலை
அதாவது கடந்த 2000ம் ஆண்டு முதல் நகராட்சி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இதையடுத்து அரசும், அவர்களின் கோரிக்கையை ஆழமாக பரிசீலனை செய்தது.. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் ராஜாராம் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொண்டு, 5வது பிரதான சாலையிலிருந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்கு எந்த வளைவும் இல்லாமல் நேரடி இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இதனால் மக்கள் நேரடியாக பயணிக்க முடியும், போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துகளும் தடுக்கும் என்று கூறப்பட்டது. எனினும் நிதி மற்றும் திட்ட நிர்வாக காரணத்தால் அந்த பரிந்துரைகள் பல வருடங்களாக நிறைவேறவில்லை. ஒருவழியாக இப்போதுதான் நல்ல செய்தி வந்துள்ளது.."
நங்கநல்லூருக்கு நல்ல காலம்
ஆம், நங்கநல்லூர் 5வது பிரதான சாலையிலிருந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதை வரை புதிய நேரடி சாலை அமைக்க, ரூ.29.57 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலை சுமார் 120 மீட்டர் நீளமாக அமைக்கப்படும், இதற்காக 1,069 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படும். இதில் 16 குடியிருப்பு கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்திய பிறகு, சென்னை மாநகராட்சி சாலை பணியை மேற்கொள்ளும்.
25 வருடகால போராட்டம்இந்த புதிய சாலை உருவானால், நங்கநல்லூர், வாணுவம்பேட்டை, உள்ளகரம், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக சுரங்கப்பாதையை அடைய முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறையும்.. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்கும், அவசர வாகனங்கள் தடையில்லாமல் செல்லும்.
25 வருடங்களாக போராடி இப்போதுதான் அதற்கு பச்சை சிக்னல் கிடைத்திருப்பதால், நங்கநல்லூர் மக்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டால், அவர்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை தரும் என்று நம்பப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications