அரசு ஊழியர்கள் மார்ச் மாத சம்பளம்.. ஏப்ரல் 1ம் தேதி கிடைக்காது.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் தள்ளிப்போகிறது.. 2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாள் மார்ச் 31ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆனால் அன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் விடுமுறையாகும். அதேபோல் மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதுடன் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகும். அதேபோல் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஏப்ரல் 1ம் தேதியை பொறுத்தவரை வங்கி கணக்கு தொடக்கம் என்பதால் அன்று எந்த பணிகளும் வங்கிகளில் நடைபெறாது. எனவே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இந்த முறை ஏப்ரல் 2ம் தேதி தான் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் பென்சன் ஆகியவை பொதுவாக ஒவ்வொரு மாத இறுதியில் வழங்கப்படுவது வழக்கம். அல்லது மாதத்தின் முதல் நாளிலேயே வழங்கப்படும். அதிகபட்சமாக சொல்வது என்றால், மாதம் ஒன்றாம் தேதியானால் சம்பளம் அக்கவுண்டில் விழுந்துவிடும். அரசு ஊழியர்களுக்கு இதுவே நடைமுறையாக தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் வரும் ஏப்ரல் மாதம் தள்ளிப்போகிறது.

ஏனெனில் மார்ச் 29ம் தேதிக்கு மேல் வங்கிகளால் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு விடுமுறை வருகிறது. அதேபோல் ஆண்டு இறுதியில் கணக்கு வழக்கு பார்க்க வேண்டியதிருப்பதால், அவர்களால் மார்ச் 28 அல்லது மார்ச் 29ம் தேதிக்குமேல் வழக்கமான பணிகளை மேற்கொள்வது சவாலாக இருக்கும்.
இதுதவிர மார்ச் 30ம் தேதி ஞாயிறு (தெலுங்கு வருடப்பிறப்பு), மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் சம்பளத்தை அரசின் கருவூலத்துறை அனுப்பினாலும் வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
ஏனெனில் ஏப்ரல் 1ம் தேதி வங்கிகளில் எந்த பணியும் மேற்கொள்ள மாட்டார்கள். மார்ச் 2ம் தேதி தான் பணிகளை மேற்கொள்வார்கள். புது கணக்கு ஆரம்பிக்கும் நாள் ஏப்ரல் 2ம் தேதி என்பதால் அன்று தான் வழக்கமான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளும். எனவே ஏப்ரல் 2ம் தேதி தான் இந்த முறை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் ஊழியர்கள்/ஆசிரியர்கள்,7.05 இலட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக்கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications