மனோஜ் மனைவிக்கு சொத்து கிடையாதா? மருமகளை விரட்டிட்டாங்களா? பாரதிராஜா தம்பி உடைத்த ரகசியம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் இன்னும் அடங்கிய பாடில்லை. குறிப்பாக இறுதிச் சடங்கின் போது நடந்ததாக கூறப்படும் குடும்ப தகராறு, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறிய நிலையில், தற்போது அதுகுறித்து பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் மனவேதனையுடன் அளித்துள்ள விளக்கம் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா. நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்திய அவர், ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு குடும்பத்தைப் பற்றிய செய்திகள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

பாரதிராஜா இறுதி சடங்கில் நடந்த சம்பவம்
பாரதிராஜாவின் இறுதிச் சடங்கின் போது மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட கருத்து வேறுபாடு இணையத்தில் பல்வேறு கதைகளாக பரவியது. சிலர் "மருமகளை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்கள்" என்றனர். சிலர் "சொத்து பிரச்சனை காரணமாக குடும்பம் உடைந்துவிட்டது" என்றனர். இன்னும் சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் "ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்காக குடும்பத்தில் மோதல்" என்ற தலைப்புகளுடன் தகவல்களை பரப்பத் தொடங்கின.
இதனால் பாரதிராஜா குடும்பம் குறித்து பல்வேறு ஊகங்கள் உருவாகின. குறிப்பாக ஜனனி மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. "சொத்துக்காக மருமகளை ஒதுக்குகிறார்கள்" என்ற குற்றச்சாட்டுகளும் பரவின.
இந்த நிலையில் தான் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், "சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசுறாங்க. எங்க குடும்பத்தைப் பற்றி தெரியாம பலரும் அவதூறு பரப்புறாங்க. ஆயிரம் கோடி சொத்துக்காக சண்டை நடக்குதுன்னு பேசுறதை கேட்கும்போது வேதனையா இருக்கு. எங்க குடும்பத்தை இவ்வளவு கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?" என்று ஆதங்கப்பட்டார்.
அதோடு, பரவி வரும் சொத்து விவகார வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்."பாரதிராஜா அண்ணன் உயிரோட இருக்கும்போதே சொத்துக்களை பிரிச்சு எழுதி வைத்துட்டார். மகளுக்கு தனியாக ஒரு பங்கு, மருமகளுக்கு தனியாக ஒரு பங்கு, மனைவிக்கு தனியாக ஒரு பங்கு என்று மூன்று பங்காக எல்லாவற்றையும் ஒழுங்காக பிரித்து கொடுத்துவிட்டார். அதனால் இப்போது சொத்துக்காக யாரும் சண்டை போட வேண்டிய அவசியமே இல்லை" என்றார்.»
மேலும், "அண்ணி இருக்கும் வரைக்கும் அவருடைய பங்கு அவரிடமே இருக்கும். அவருக்குப் பிறகு அது சட்டப்படி இரண்டு பங்காக பிரியும். அவ்வளவுதான். இதை விட்டுவிட்டு மக்கள் கற்பனைக்கு எட்டிய கதைகளை உருவாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.
வதந்திகளுக்கு பதில்
ஜெயராஜின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் "ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனையை சொத்து சண்டையாக மாற்றி பேசுவது தவறு" என்றும், "பாரதிராஜா போன்ற ஒரு சாதனையாளரின் குடும்பத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், பாரதிராஜா வாழ்ந்த காலத்திலேயே குடும்பத்தினருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சொத்துகளை தெளிவாக பிரித்து வைத்திருந்தார் என்ற தகவலும் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமாவில் பல கதைகளை உருவாக்கிய பாரதிராஜாவின் குடும்பமே இப்போது ஒரு கதையாக சமூக வலைதளங்களில் பேசப்படுவது அவரது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது. "உண்மை தெரியாமல் பேசுவதை நிறுத்துங்கள்" என்பதே தற்போது பாரதிராஜா குடும்பத்தினரின் ஒரே வேண்டுகோளாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications