ஸ்டாலினின் தோளை தொட்டு வணக்கம் வைத்த உமா.. எ.வ.வேலு -அண்ணாமலை அன்பு மழை! அங்க பாருங்க எச்.ராஜா பண்ணத
சென்னை: ஆளுநரின் தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது என்று ஒருசாராரும், முதல்வர் இந்த நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு நடுவில், விருந்து நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. என்ன காரணம்?
தமிழகத்தை இதற்கு முன்பு ஆண்ட ஆளுநர்கள் போல, இப்போதைய தமிழக ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சி பொறுப்பேற்ற அதேசமயத்தில்தான், ரவியும் கவர்னராக இங்கு பொறுப்பேற்றார்.

ஒருவேளை திமுக அரசுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்ததாககூட அப்போது சலசலக்கப்பட்டது.. அதற்கேற்றபடி, ஆளுநர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு விவகாரங்களில், மாநில அரசுக்கு இணக்கமான போக்கு இல்லை. இதுவே ஒவ்வொரு வருடமும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க காரணமாக அமைந்து விடுகிறது. கடந்த முறை போலவே இந்த முறையும், டீ பார்ட்டியை திமுக புறக்கணிப்பதாக அறிவித்தது.
ஸ்டாலின்: எனினும், ஸ்டாலின் இந்த நிகழ்வில் பங்கேற்றவார்.. திமுக தலைவராக அல்லாமல், ஒரு மாநில முதல்வராக பங்கேற்றிருந்தது, வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.. அதுக்காக, எதிரும் புதிருமாக இருந்தவர்கள், திடீரென ஓவர்நைட்டில் நெருக்கம் பாராட்டியதுதான், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாகிவிட்டது..

ஆளுநரும், அவரது மனைவி லட்சுமி ரவியும், அரசியல் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கே சென்று அவர்களை வரவேற்றார்கள்.. ஆளுநருக்கு பக்கத்திலேயே ஸ்டாலினும் உட்கார்ந்திருந்தார். 2 பேரும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.. ஆளுநர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இவர்கள் எல்லாருமே ஒரே மேஜையில் உட்கார்ந்து டீ குடித்தார்கள்.. விருந்துக்கு பிறகு முதல்வரை கவர்னர் வழியனுப்பி வைத்தார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி என ஒட்டுமொத்த தலைவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.. கைகளை குலுக்கி பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து கொண்டனர்..

அண்ணாமலை: பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து, அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொண்டிருந்தார்.. அப்போது தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அண்ணாமலையின் பின்னாடியே சென்று அவரிடம் ஏதோ சீரியஸாக பேசினார். இதை விருந்தில் உள்ள அனைவருமே ஒருகணம் உற்று நோக்கினார்கள்.
இவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், வருகிற 18ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்திற்கு வர உள்ள நிலையில், அது குறித்து அண்ணாமலையிடம் அமைச்சர் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாமக - தேமுதிக: பாமகவும், தேமுதிகவும் எப்போதுமே எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வருகின்றன.. ஒவ்வொரு தேர்தலின்போதும், ஒரே கூட்டணியிலிருந்தாலும்கூட, பாமகவுக்கு எவ்வளவு சீட் தருகிறீர்களோ, அதே அளவு எங்களுக்கும் வேண்டும் என்று பிடிவாதமாக வாதம் செய்து கேட்டு வாங்கும் தேமுதிக.. ஆனால் நேற்றைய நிகழ்வில், மூத்த தலைவர் ஜிகே மணி பக்கத்திலேயே பிரேமலதாவும், சுதீஷூம் உட்கார்ந்திருந்தனர்.
ஓபிஎஸ் அருகில் உட்கார்ந்திருந்த பிரேமலதா, விருந்தின்போது, ஜெயக்குமார் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டார். அப்போது ஜெயக்குமார் சாப்பிடுவதைவிட்டுவிட்டு, வழக்கம்போல் தன்னுடைய கலகலவென பேச்சை ஆரம்பித்துவிட்டார். ஜெயக்குமார் பேசப்பேச,. சுதீஷூம், பிரேமலதாவும் சிரித்துக் கொண்டே அவரது பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

எச்.ராஜா: அதேபோல, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, முதல்வரிடம் வந்து கைகுலுக்கி நலம் விசாரித்தார்..எச்.ராஜா தன்னருகில் வந்ததுமே, அவரது கையை கப்பென்று தன்னுடைய 2 கைகளாலும் பிடித்து கொண்டு சிரித்தபடியே பேசினார் ஸ்டாலின்.. எச்.ராஜாவும் சிறிது நேரம் ஸ்டாலினிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்திலேயே துரைமுருகன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையும் ஒருபார்வை பார்த்து, துரைமுருகனுக்கும், சபாநாயகருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தார்..
எச்.ராஜாவை தொடரந்து, "இந்து விரோத திமுக" என்று தொடர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், முதல்வர் ஸ்டாலினின் அருகில் வந்து, அவரது தோளை தொட்டு, கைகளை கூப்பி வணக்கம் வைத்தார். பதிலுக்கு ஸ்டாலினும் வணக்கம் சொன்னார்.

சந்திப்புகள்: பொதுவாக ஒரு அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்
ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக தலைவர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசுவதையே தவிர்த்தார்கள்.. நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்துவிடுமே என்று பெரும்பாலான நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள்..
தற்போது கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பிம்பங்களுமே இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தவாறே இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் இந்த சலசலப்புகள் குறைய துவங்கிவிட்டன.

ரங்கராஜ் பாண்டே: பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவின்போது, அவரது வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி ஆறுலை சொல்லியிருந்தார்.. ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று, அவரது தாயார் மறைவுக்கு ஆறுதலை சொல்லியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் அம்மாவின் மறைவுக்கு சேலத்துக்கு நேரில் சென்று அஞ்சல் செலுத்தியிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஸ்டாலினை அன்று நேரில் சந்தித்த எச்.ராஜா பொன்னாடை போர்த்தி தனது மகள் திருமண அழைப்பிதழை தந்து, "நீங்க அவசியம் கல்யாணத்துல கலந்துக்கனும்" என அழைப்பு விடுத்ததாகட்டும், எச்.ராஜாவின் மணிவிழாவில், ஸ்டாலின் நேரில் பங்கேற்று, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதையும், தமிழக மக்களால் மறக்க முடியாது.

பெருமிதம்: அந்தவகையில், தங்களது சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது..
நேற்றைய தினம் பாஜக தலைவர் அண்ணாமலை, "ஒருவர் வணக்கம் சொலும் நாமும் வணக்கம் போட வேண்டும், எங்கே சண்டை வேண்டுமோ, அங்கே நாமும் சண்டை போட வேண்டும்" என்று சொல்லியிருப்பது அனைவராலும் ஏற்கக்கூடியதே.
அரசியல் நாகரீகம்: ஆகமொத்தத்தில், "அரசியல் நாகரீகம்" என்பது இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் மீண்டும், துளிர்த்து தழைத்து நம்மிடம் மலர்ந்து கொண்டிருக்கிறது என்பதும், நேற்றைய ஆளுநரின் டீ பார்ட்டியில் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications