‛‛கள்ளச்சாராயம் விற்றால் இனி தண்டனை இதுதான்’’.. மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட 66 பேர் இறந்தனர். இதையடுத்து கடந்த மாதம் 29 ம் தேதி சட்டசபையில் மதுவிலக்கு திருத்த மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் இனி கள்ளச்சாராயம் விற்போருக்கான தண்டனை கடுமையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி தற்போது 66 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இருப்பினும் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 66 பேர் பலியான சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
இந்த சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. இதனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். கேள்வி நேரத்தை தவிர்த்து விவாதிக்க கூறிய அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா 2024 என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு இந்த சட்ட திருத்த மசோதா ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா 2024க்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.இந்த சட்டத்திருத்த மசோதா சட்டமாகும்போது கள்ளச்சாராயம் தயாரித்து விற்றால் ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். இதுதவிர அவர்களின் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications