ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சுப உதயகுமார்.. அதில் என்ன இருக்கு தெரியுமா?
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை அவமதித்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏப்ரல் 8-ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனரும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
"போராட்டத்தை வெளிநாட்டு நிதி என்று அழைப்பதன் மூலம், பொது நலன் கருதி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு வெளிநாடுகள் நிதியுதவி அளித்ததாக ஆளுநரின் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

எண்ணித் துணிக நிகழ்ச்சியில் "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCR Act), பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாநிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார்.
அப்போது ஆளுநர் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து அத்தகைய நன்கொடை வருமானால், அங்கு எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்.

கூடங்குளம் போராட்டம்: இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடை வரவும் உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக தென் மாவட்டத்தில் அணுஉலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், வெடிப்பு, மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது என ஆளுநர் கூறினார்.
ஆளுநருக்கு கண்டனம்: ஆளுநர் சொன்னது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றியது என்பதால்,அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி சுப.உதயகுமார் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை அவமதித்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏப்ரல் 8-ம் தேதி வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார்.
உதயகுமார் பேச்சு: இதுகுறித்து சுப.உதயகுமார் கூறும் போது, " 'எண்ணித் துணிக' எனும் தலைப்பில் குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆற்றிய உரை ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பாக வெளியாகி உள்ளது. அதில் உதாரணமாக, 'தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்றத் தாக்கம், அணு உலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தது என்றும. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதிவந்தது தெரிய வந்தது' என ஆளுநர் பேசியிருந்ததாக செய்தி குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

வக்கீல் நோட்டீஸ்: இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்து என்பதால் ஆளுநர் தனது பேச்சைத் திரும்பப் பெற வலியுறுத்தி அவருக்கு மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அந்த நோட்டீஸில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனது மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை பேசியுள்ளீர்கள். உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது என்பதால் அது அவதூறின்கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் எனும் முறையில் கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆகிய என்னை மட்டும் அல்லாது, அணு உலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை உடனடியாகத் திருத்த வேண்டும். இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம் என வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது " என்றார்.
நோட்டீஸில் உள்ளது என்ன? : இதனிடையே அந்த நோட்டீஸில், "போராட்டத்தை வெளிநாட்டு நிதி என்று அழைப்பதன் மூலம், பொது நலன் கருதி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் கவர்னர் அவமதித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு வெளிநாடுகள் நிதியுதவி அளித்ததாக ஆளுநரின் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. .












Click it and Unblock the Notifications