மின்சாரம், சாலை வசதி இல்லா காலத்திலேயே.. திருவள்ளுவர் செய்த சம்பவம்.. நெகிழ்ந்த ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: மின்சாரம், சாலை வசதி இல்லாத காலத்தில் பள்ளி படிப்பின்போது நான் திருவள்ளுவரை பற்றி அறிந்தேன். அந்த காலத்தில் எனக்கு திருக்குறள் கிடைக்கவில்லை. தமிழகம் வந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் நூல் திருக்குறள். ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள், சேவை பற்றியும், வெளியுறவு கொள்கைகள் குறித்தும், அந்நிய நாடுகளுடன் உறவை பேணுவது பற்றியும் திருக்குறள் சொல்கிறது என ஆளுநர் ஆர்என் ரவி கூறினார்.
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாளான இன்று ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று வழிபாடு செய்தார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி திருவள்ளுவர் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது அவர் பள்ளிப் பருவத்திலிருந்தே திருவள்ளுவர் மற்றும் திருக்குறளுடன் நீண்ட தொடர்பையும், சில குறள்கள் தனது வாழ்வை எவ்வாறு வடிவமைத்து மாற்றியமைத்தன என்பதையும் விவரித்தார். ஆளுநர் ஆர் என் ரவி கூறியதாவது: நான் இங்கு ஆளுநராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன். திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் எனக்கும் உணர்ச்சிமிகு தொடர்பு உண்டு. மின்சாரம், சாலைவசதி இல்லா காலத்தில் எனக்கு பள்ளி பருவத்தில் ஒரு லட்சியம் இருந்தது.
பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964ம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில் பாரதத்தின் தென் கோடியில் ஒரு மஹான் இருந்தார் அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குரளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. பலரும் இந்த மேடையில் உச்சரித்த குறள் அது. அது எனக்கு உத்வேகம் ஊட்டிய குறள் அதுதான்
" எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்"
கீதையை பள்ளி நாட்களில் படித்து மனப்பாடம் செய்துள்ளேன். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிற வரிகள் என் வாழ்க்கையில் பணிகளில் கடைபிடித்துள்ளேன். ஆனால் திருக்குறள் என் வாழ்க்கையில் வந்தப்பின் அது வேறு வகையில் என் வாழ்க்கையில் புது அனுபவத்தை தந்தது. அந்த காலத்தில் எனக்கு திருக்குறள் கிடைக்கவில்லை. தமிழகம் வந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் நூல் திருக்குறள். ஒவ்வொரு தடவை திருக்குறளை வாசிக்கும்போதும் எனக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்தது.
குறள் இரண்டடிதான் ஆனால் ஏராளமான பொருள்பதிந்தது. நான் குறளை வாசிக்க வாசிக்க எனக்கு அது தனிநபராக, குடும்பதலைவனாக வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்த்தியது. மன்னர்கள் கடவுள்கள் அல்ல, ஆட்சியாளர்கள் அவர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள், சேவை, ஆட்சி செய்வது குறித்து திருக்குறள் சொல்கிறது. வெளியுறவு கொள்கைகள் குறித்தும், அந்நிய நாடுகளுடன் உறவை பேணுவது பற்றியும் சொல்கிறது.
வாழ்க்கையின் பின் உள்ள தத்துவங்களை சொல்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. திருக்குறள் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாக பார்க்கிறது. இது நூல் அல்ல வாழ்க்கையின் தொகுப்பு. வைகாசி அனுஷம், தமிழ் நாள்காட்டி திருவள்ளுவரை கொண்டாடுகிறது. இந்த விழாவை எடுத்ததன் மூலம் ஒரு சீடனாக என் குருவுக்கு அளித்த காணிக்கையாக இதை கருதுகிறேன். திருக்குறளை பலரும் பல்வேறு விதங்களில் மொழிப்பெயர்த்துள்ளனர்.
தத்துவார்த்த ரீதியாகவும், அறிவார்ந்த ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் அணுகியுள்ளனர். ஒவ்வொரு ரீதியிலும் வெவ்வேறு பரிமாணங்களை அளிக்கும் திருவள்ளுவர் இந்த புண்ணிய பூமியில் அவதரித்தற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு ஒரு மாணவனாக, சீடனாக திருக்குறளை தமிழகத்திற்கு வெளியே கொண்டு சேர்ப்பேன். மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டுச்சேர்ப்பேன். திருக்குறள் உலகம் முழுவதிலும் மொழிப்பெயர்க்கப்படவேண்டும், நமது பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்'' என்றார்.












Click it and Unblock the Notifications