பங்காரு அடிகளார் உடலுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி சல்யூட்.. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சல்யூட் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணும் இடமெங்கும் செவ்வாடையாக காட்சி அளிக்கிறது. வழக்கமாகவே ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தினசரியும் பக்தர்கள் வந்தாலும் இன்றைய தினம் குவிந்திருப்பது பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத்தான். 82 வயதான பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்களின் வழிகாட்டியாக இருந்த நம்பிக்கையாக இருந்த ஆன்மீக குரு அம்மா மறைந்து விட்டார் என்று லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை நேரில் வந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். அப்போது ஆளுநர் ரவி சல்யூட் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி மலர்வளையம் வைத்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
பங்காரு அடிகளார் தனது ஆன்மீக பயணத்தை எங்கு தொடங்கினாரோ அங்கேயே முடித்துக்கொண்டார். ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக
கலந்து விட்டாலும் தங்களுடனேயே இருக்கிறார். தங்களுக்கு வழிகாட்டுவார் என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர் அவரது பக்தர்கள்.












Click it and Unblock the Notifications