மிளகு முதல் சர்க்கரை வரை.. சர்ரென எகிறிய மளிகை பொருட்கள் விலை.. எந்தளவு உயர்வு? புலம்பும் பொதுமக்கள்
சென்னை: கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தாண்டு கோடை வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் தான் வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு பிப். முதலே பல பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

கடந்த சில காலமாக வெப்பம் இன்னுமே உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல வேண்டாம் என்றே தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
விலையேற்றம்: இது மட்டுமில்லை. நாம் வீடுகளுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் அனைத்து மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த பிப் மாதம் ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சர்க்கரை விலை இப்போது ரூ.48ஆக அதிகரித்துள்ளது. அதேபோல துவரம் பருப்பு ரூ.150இல் இருந்து ரூ.170க்கு இரண்டே மாதத்தில் உயர்ந்துள்ளது. இதேபோல பாசிப் பருப்பு ரூ.110இல் இருந்து ரூ.125, கடலை பருப்பு ரூ.70இல் இருந்து ரூ.80க்கு உயர்ந்துள்ளது.
மளிகை பொருட்கள்: மேலும், மிளகு கடந்த பிப். மாதம் ஒரு கிலோ ரூ.590க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது ரூ.640க்கு அதிகரித்துள்ளது. இது தவிர சீரகம் (மார்ச்- ரூ.295, ஏப்ரல் ரூ. 380), மிளகாய்த் தூள் (மார்ச்- ரூ.295, ஏப்ரல் ரூ. 310), மஞ்சள் தூள் (மார்ச்- ரூ.205, ஏப்ரல் ரூ. 222) என்று கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
காய்கறி: மளிகை பொருட்கள் மட்டுமின்றி காய்கறி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அவரைக்காய், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, பீட்ரூட், பீன்ஸ் என்று பெரும்பாலான காய்கறி விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மட்டுமின்றி நடுத்தர மக்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும், அரசு குறைந்த விலையில் காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதீத வெப்பம் தான் விலை இந்தளவுக்கு உயர முக்கிய காரணம். பெரும்பாலும் சென்னைக்கு வரும் காய்கறி, மளிகை பொருட்கள் அண்டை மாநிலங்களில் குறிப்பாகக் கர்நாடகாவில் இருந்தே வருகிறது. ஆனால், இந்த முறை கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் வறண்ட ஒரு வானிலையே இருக்கிறது. கடந்த பருவமழை காலத்தில் போதியளவில் மழை பெய்யாமல் போனதாலும், இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் அடிக்க ஆரம்பித்ததாலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்: இதனால் உற்பத்தி குறைந்து வரத்து குறைந்துள்ளது. இதுவே விலையேற்றத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது 3 மாதங்கள் வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும். அதன் பின்னரும் கூட பருவமழை தொடங்க சில மாதங்களாவது ஆகிவிடும் என்பதால் வரும் காலத்திலும் காய்கறி விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது












Click it and Unblock the Notifications