எதுக்கும் துண்டு போட்டு வைங்க! அடுத்த தாம்பரம்.. கூல் ஆக போகும் கூடுவாஞ்சேரி! வேகமெடுக்கும் பணிகள்.!
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியில் கூடுவாஞ்சேரியில் ரயில் நிலையம் 21 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை அசுர வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்து இருக்கின்றனர்.

இதனால் சென்னை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக சென்னையின் மையப்பகுதியில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் கிளாம்பாக்கத்தில் உலக தரத்திலான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பேருந்து பயணத்திற்கு முன்னதாகவே சென்னையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது செங்கல்பட்டு சென்னை கடற்கரை இடையே நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை நகரில் வேலை பார்க்கும் ஏராளமானோர் புறநகர் பகுதிகளில் குடி புகுந்துள்ளனர். இதனால் கூடுவாஞ்சேரி தற்போது வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறி வருகிறது. தாம்பரம் வரை நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அமைதியான வாழ்க்கை தேடும் மக்கள் பெருங்களத்தூரை தாண்டி நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், மாதம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தங்கி உள்ளனர்.
சிங்கம்பெருமாள் கோவில் வரை கூட மக்கள் தினமும் பயணிக்கின்றனர். தற்போது கிளாம்பக்கத்தில் புதிய பேருந்து நிலையம் காரணமாக அங்கு ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. சுமார் 21 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் ஒட்டுமொத்த அடையாளமும் மாற இருக்கிறது.
பிரம்மாண்டமான முகப்பு, அதிநவீன பிளாட்பாரங்கள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. மேலும் ரயில் வருகை குறித்து அறிவிக்க டிஜிட்டல் விளம்பர பலகைகள், அதிநவீன வசதிகளுடன் தங்குமிடம், மழையால் பாதிக்கப்படாத பிளாட்பாரங்கள், பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு இருக்ககை ஆகியவை அமைக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக அதிநவீன கழிப்பறைகள், பிரம்மாண்ட பார்க்கிங், தூய்மையான சுற்றுப் புறத்தை பேணும் கையில் பூங்கா ஆகியவையும் அமைக்கப்படுகிறது. தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தற்போது சென்னை நகரில் வீடு மனை உள்ளிட்டவை வாங்குவது கனவாகவே உள்ளது.
பெருங்களத்தூர் வரை வீட்டுமனைகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் அதனையும் தாண்டிய புறநகர் பகுதிகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கூடுவாஞ்சேரியில் மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல பகுதிகள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தற்போது ரயில் நிலைய மேம்பாடு காரணமாக மேலும் அதிகமானோர் அங்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி அடைய உள்ளது.












Click it and Unblock the Notifications