பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட டாக்டர் பாலாஜியின் நெஞ்சிலேயே கத்தியால் குத்திய கொடூரம்! நடந்தது என்ன?
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் மருத்துவர் பாலாஜியை நோயாளி போல் வந்த ஒருவர் கத்தியால் குத்திய நிலையில் அங்கு நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
கடந்த 2021-ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே மருத்துவமனை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்தே இங்கு பணியாற்றி வருபவர் டாக்டர் பாலாஜி. இவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக உள்ளார். இந்த மருத்துவமனையில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாய் காஞ்சனாவை புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு அந்த பெண்ணுக்கு 6 முறை கீமோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிகிச்சைகளில் விக்னேஷ் திருப்தி அடையாததால் மருத்துவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினம் கத்தியுடன் வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டாக்டர் பாலாஜியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து தப்பியோடிய விக்னேஷை அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் அதிக ரத்த போக்கு அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த நிலையில் கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக இந்த மருத்துவமனையில்தான் விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் முற்றிய நிலையிலேயே தனது தாயை விக்னேஷ் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது விக்னேஷிடம் "நோயாளியின் நோயை முழுவதுமாக போக்கி உயிரை காப்பாற்ற முடியாது, ஆனால் அவரது வாழ்நாளை கீமோதெரபி சிகிச்சையால் ஓரளவுக்கு அதிகரிக்கலாம் என பாலாஜி கூறியிருந்தார்". அவரது ஒப்புதலின்பேரில்தான் கீமோதெரபி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது தாயை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்த மருத்துவமனை மருத்துவர் என்ன சொன்னார் என தெரியவில்லை, இவர் என்ன புரிந்து கொண்டார் என்றும் தெரியவில்லை. இன்று காலை ஓபி சீட்டுடன் மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மருத்துவரை கத்தியால் குத்திவிட்டார். மருத்துவர்கள் அலறியும் யாராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து மருத்துவரை குத்திவிட்டு வெளியே வந்த விக்னேஷை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். மருத்துவருக்கு உடனே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர் இதய நோயாளி, அவருக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டுள்ளது. ரத்தம் உறையாமல் இருப்பதற்காக மருந்து சாப்பிட்டு வருகிறார். இதனால் கத்தியால் குத்தியதும் ஏராளமான ரத்தம் வெளியேறிவிட்டது. அதாவது கத்திக் குத்தை விட இந்த ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது மருத்துவர் மயக்கத்தில் இருக்கிறார். அவர் கண் விழித்ததும்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என இயக்குநர் கூறியிருந்தார். விக்னேஷ் காய்கறி வெட்டும் கத்தியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications