சேலத்துக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டர் வேணுமா? சமையல் சிலிண்டர் பதியணுமா? ரூம் நம்பர் 115! வாவ்
சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.868.50 விற்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களையும் விநியோகம் செய்து வருகிறது...

இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும்போது எளிதாக கொண்டு செல்லும் வகையில், 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இதனால் சிலிண்டர்களின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.
தமிழகம் முதலிடம்
இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சமீபத்தில் கூறியபோது, "கடந்த 2024-25-ம் ஆண்டில் 1.06 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு, அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 60 ஆயிரம் இணைப்புகளை வழங்கி கர்நாடகா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 1.06 லட்சம் இணைப்புகளில் 60 சதவீதம் பேர் புதிய வாடிக்கையாளர்கள் ஆவர். மேலும், இதுவரை 1.85 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் அதிகளவில் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் விதிமுறைகள்
இதில், சென்னை முதலிடத்திலும், கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இந்த சிறிய ரக சிலிண்டர் இணைப்பு பெற ரூ.3 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த புதிய இணைப்பு பெற அவர்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ள வைப்புத் தொகை போக எஞ்சிய தொகையை செலுத்தினால் போதும். தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த சிலிண்டர் வெடித்து சிதறாது. இந்த சிலிண்டர் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் அரசு வழங்கும் மானியம் பெற தகுதி கிடையாது" என தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
சேலம் மாவட்ட கலெக்டர்
இந்நிலையில், கேஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக புகார்கள், குறைபாடுகள் இருந்தால் அவைகளை முகாம் நடத்தி அரசு சரிசெய்து வருகிறது.. அதன்படி, சேலம் மாவட்டத்திலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களை கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு நுகர்வோர்களுக்கான மே-2025 மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் 30-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
குறைதீர்க்கும் கூட்டம்
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், "சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
வருகின்ற 30.05.2025, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்.115-இல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ள வேண்டும்" என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications