நிலத்தை வாங்குவோருக்கு குஷி.. எதெல்லாம் தடை செய்யப்பட்ட நிலம்? சர்வே எண் வெளியிடும் பதிவுத்துறை.. அட
சென்னை: நிலம் வாங்குபவர்கள், நீர் நிலை, கோயில் போன்ற தடை செய்யப்பட்ட இடங்களை வாங்கி விடுகிறார்கள்.. இதனால் பின்னாளில் மிகுந்த ஏமாற்றத்துக்கும், அவதிக்கும் ஆளாக நேரிடுகிறது.. எந்தெந்த நிலங்களை வாங்கலாம், தடை செய்யப்பட்ட நிலங்கள் என்னென்ன? என்பது குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவதில்லை.. இதுகுறித்த முக்கிய கோரிக்கை பதிவுத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுசம்பந்தமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கடந்த 2021ல், புறம்போக்கு நிலங்களில் 5 வருடத்துக்கு மேல் வசிப்போருக்கு, பட்டா வழங்குவதற்கான வரன்முறை திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.. அதில், கோவில் நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா கிடைக்கும் என்று கூறியிருந்தது.

உடனே இதனை எதிர்த்து, பலரும் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடுத்தனர். இறுதியில், கோவில் நிலங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் பட்டா வழங்க மாட்டோம் என கோர்ட்டில் அரசு உறுதி தெரிவித்திருந்தது.
கோவில் நிலங்களுக்கு பட்டா
கடந்த மாதம்கூட, பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதில் "பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள், கல்லாங்குத்து, புறம்போக்கு, கிராம நத்தம், அரசு நஞ்சை மற்றும் புஞ்சை மற்றும் பிற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்... ஆனால், நீர் நிலைகள், கோவில், வழிபாட்டு தலம் மற்றும் வக்பு வாரியத்தின் பட்டா நிலங்கள், ஒன்றிய அரசு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாது" என உறுதியாக கூறியிருந்தது.
சுருக்கமாக சொல்லப்போனால், கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க முடியாது.. "கோவில்" வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும், பட்டா வழங்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தியிருந்தது.
தொடர்ந்து ஏமாறும் பொதுமக்கள்
ஆனால், நீர் நிலைகள், கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளதென்றாலும், எந்தெந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களுக்கு, இந்த தடை பொருந்தும் என்ற விபரங்கள் வெளிப்படையாக இல்லை. இது தெரியாமல்தான் பலரும் நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்களையும், கோயில் நிலங்களையும் வாங்கி ஏமாந்துவிடும் நிலைமை வந்துவிடுகிறது.
குறிப்பிட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு செல்லும் மக்கள், தடை செய்யப்பட்ட சர்வே எண்கள் குறித்த விபரங்களை எளிதாக அறிய முடிகிறது என்றாலும் பிற பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை.
தடை செய்யப்பட்ட நிலம் எது
அதேபோல, அனைத்து விவரங்களும் அந்தந்த சார் பதிவாளரிடம் உள்ளது என்றாலும், அவைகளை பணிச்சுமை காரணமாக பொது மக்களுக்கு தெரிவிப்பதுமில்லை.. இதனால் நிலம் , வீடு வாங்குபவர்கள் பிற்காலத்தில் சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்..
எனவே, ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும், அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போதுதான் பொது மக்கள், நீர் நிலைகள், கோயில் நிலங்களை வாங்குவதை தவிர்க்க முடியும் என்றும் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் சேனல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறந்த விழிப்புணர்வு
இந்த கோரிக்கையை பதிவுத்துறை விரைந்து பரிசீலிக்கும் என்றே தெரிகிறது.. தடை செய்யப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்களை அந்தந்த சார் பதிவாளர்கள் வெளியிட்டு, அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தினால் நிலம் வாங்குவோர்கள் எளிதில் ஏமாற முடியாது. வருவாய்த் துறையிடம் இருந்து, சரியான விபரங்களை பெற்று வெளியிடுவதால், பொது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications