மொட்டை போடும் ஊழியர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்க தொகை.. முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது
சென்னை: திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கிறார்.
இந்து சமய அறிநிலையத்துறை பல்வேறு அதிரடிகளை வெளியிட்டு வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் அமைச்சர் சேகர்பாபு சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், "ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

காணிக்கை
அறநிலையத் துறை பராமரிப்பிலுள்ள திருக்கோவில்களில் இனி பக்தர்கள் முடி இறக்கி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற இந்த நடைமுறை நாளை செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும்... அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.

மொட்டை
அதுமட்டுமல்ல, மொட்டைக்கு இல்லை கட்டணம் என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை எழுந்தது.. எனவே, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் அறிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அதன்படி இந்த திட்டத்தை நாளை காலை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.. சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் முதல்வர் இதனை தொடங்கி வைக்கிறார்... இந்த திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.. எனவே, கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, நெகட்டிவ் சர்ட்டிபிகேட் இருந்தால் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நலத்திட்டம்
மேலும், கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.. நலத்திட்டம் அறிவிக்கப்பட்டு ஒருசில தினங்களே ஆன நிலையில், அவைகளை முதல்வர் அறிவிக்க உள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று தந்து வருகிறது.

விமர்சனம்
ஆனால் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கியதை விமர்சித்திருந்தார்.. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல், அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்களே?

வாக்குறுதி
அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குறைவான எண்ணிக்கையில் அர்ச்சகர்களை கொண்டு தங்களின் தேர்தல் வாக்குறுதி மோசடியை வேறுபக்கம் திசை திருப்பும் காரியமே ஆகும் என்று விமர்சித்திருந்தார்.. இப்போது மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க உள்ளதற்கு அதிமுக எத்தகைய விமர்சனத்தை முன்வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications