நெகிழ்ச்சி! வேலூர் டூ சென்னை ஆம்புலன்ஸில் பறந்த இதயம்! போலீசாரின் கச்சித பிளான்.. குவியும் பாராட்டு
சென்னை: மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் இதயம் அதி விரைவாகச் சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
நாம் நமது உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், உயிரிழந்த பின்னரும் கூட பலரது உயிரை காப்பாற்றலாம். இது குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
இருந்தாலும் கூட இந்தியாவிலேயே அதிகம் உடல் உறுப்பு தானம் செய்த பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நேற்றும் தமிழ்நாட்டில் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருக்கும் அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. 43 வயதான இவர், அப்பகுதியில் கூலி வேளை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன்ரே உயிரிழந்த நிலையில், அவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

விபத்து
கூலி வேலை செய்தே இரு மகள்களையும் அவர் படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப். 1ஆம் தேதி கலைச்செல்வி தனது கிராமத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென இரு சக்கர வானம் ஒன்று பின்னால் இருந்து கலைச்செல்வி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளைச்சாவு
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நேற்று அவர் மூளை சாவடைந்தார். இதையடுத்து உடல் உறுப்பு தானம் குறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். அதைத் தொடர்ந்து உடல் உறுப்புகளைத் தானமாக வங்க அவரது உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக அவரது உடல் உறுப்புகள் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

தானம்
அவரது உடல் உறுப்புகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அவரது இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டு சில மணி நேரத்திற்குப் பொருத்தப்பட வேண்டும் என்பதால் விரைந்து எடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர்.

வேலூர் டூ சென்னை
இதனால் மிக வேகமாக வேலூரில் இருந்து இதயம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. இதற்காக வரும் வழிகளில் போலீசார் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும், அதை போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக மிக வேகமாக இதயம் சென்னை எடுத்துவரப்பட்டது.

16 நிமிடங்கள்
வழக்கமான நாட்களில் காஞ்சிபுர எல்லையில் உள்ள செட்டிப்பேடு பகுதியில் இருந்து வானகரம் வரையிலான 16 கிமீ தூரத்தில் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். இதனால் இந்தப் பகுதியைக் கடக்க அதிக நேரம் எடுக்கும். ஆனால் ஆவடி காவர் ஆணையரக போலீசார் எடுத்த துரித நடவடிக்கையால் வெறும் 10 நிமிடங்களில் இதயம் எடுத்துச் செல்லப்பட்டது.

பரபர வீடியோ
சாலை விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இப்பகுதியில் வாகனம் ஓட்டுவதே சிரமமான காரியமாக இருக்கும். இருப்பினும், அதைத் தாண்டி போலீசார் எடுத்த நடவடிக்கையால் சில நிமிடங்களில் வாகனம் அந்தப் பகுதியைக் கடந்துள்ளது. மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பகுதியைக் கடக்கும் வீடியோவை ஆவடி காவல் ஆணையரகம் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.












Click it and Unblock the Notifications